(நா.தனுஜா)
இலங்கையர்கள் எவரேனும் பாகிஸ்தானுடன் தமது வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் எமது உயர்ஸ்தானிகரகம் தயாராக உள்ளதாக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் ஷாட் கட்டாக் தெரிவித்தார்.
இவ்வாண்டுக்கான பாகிஸ்தானிய வாழ்க்கை முறை கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் மிக நீண்ட காலமாக நெருக்கமான நட்புறவொன்று பேணப்பட்டு வருகின்றது. அது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை மையப்படுத்தியதாக இருந்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ரீதியான தொடர்புகளைப் பொறுத்தவரை அதனை மேலும் மேம்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றது.
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் முயற்சியாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு பாகிஸ்தானின் விவசாயத் துறை அமைச்சு தயாராக இருக்கிறது. பாகிஸ்தான் - இலங்கைக்கு இடையிலான உச்சபட்ச வர்த்தக இயலுமையை அடைந்து கொள்வதே அதன் நோக்கமாகும்.
அதேபோன்று இலங்கையர்கள் எவரேனும் பாகிஸ்தானுடன் தமது வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் எமது உயர்ஸ்தானிகரகம் தயாராக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment