(இராஜதுரை ஹஷான்)
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கும். கடந்த அரசாங்கத்தை போன்று மாணவர்கள் மீது தாக்குதல்களை முன்னெடுக்க மாட்டோம் என தகவல் மற்றும் தொடர்பாடல், உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் கடந்த அரசாங்கத்தில் தினமும் எதிர்பார்க்கும் நிகழ்வாகவே காணப்படும். மாணவர்களை தீவிரவாதிகளை அடக்குவதை போன்று தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாரும் தயாராகவே இருப்பார்கள்.
இலவச கல்வியினை பெறும் மாணவர்களுக்கு எதிராக வன்மங்களே கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் இரு தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை.
பல்கலைகழக மாணவர்கள் மாத்திரமல்ல உரிமைகளை முன்னிறுத்தி போராடும் தரப்பினருக்கு எதிராக தாக்குதல்களை பிரயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக போராட்டத்தை மேற்கொள்வதற்கும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் உரிய தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல அக்குமுர, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment