கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை நேற்று முதல் புதிய மென்பொருளின் ஊடாக விழிப்புடன் கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.
விசேட கவனம்
இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் கூடிய சுகாதாரம் மற்றும் மனித சேமநல, சமூக வலவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
வைத்தியர்கள் குழுவுடன் இணைந்து ICTA நிறுவனம் இப் புதிய மென்பொருளை பத்து நாட்களுக்குள் தயாரித்திருப்பதாகவும், நாட்டுக்குள் வரும் சகல விமானப் பயணிகளுக்கும் இது தொடர்பில் தெரியப்படுத்தி அவர்கள் தங்கியிருக்கும் இடம், அவர்கள் செல்லும் பகுதிகள் பற்றிய சகல தகவல்களையும் பெற்று மூன்று பிரவேசிக்கும் வழிகளில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் விமானப் பயணிகளுக்கு விசேடமான பிரவேசிக்கும் வழி அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் விசேடமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். நோய்க்கான அறிகுறிகள் தென்பட 14 நாட்கள் செல்வதால் குறிப்பிட்ட காலப் பகுதியில் சகலரையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு மேலதிகமாக பலாலி விமான நிலையம், கொழும்பு, காலி, திருகோணமலை போன்ற துறைமுகங்களுக்கு அருகிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுகாதார சேவை புலனாய்வு சேவைபோன்று செயற்படுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பாராளுமன்றத்துக்கு அறிக்கை
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாக சுகாதாரம் மற்றும் மனித சேமநல, சமூக வலவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ தெரிவித்தார்.
பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகளை இந்த மேற்பார்வைக் குழுவின் ஊடாக விரிவாக ஆராய்ந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment