எமது கட்சியில் தற்போது சர்வதிகாரப் போக்கே தலைதூக்கியுள்ளது, ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

எமது கட்சியில் தற்போது சர்வதிகாரப் போக்கே தலைதூக்கியுள்ளது, ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை

எமது கட்சியில் தற்போது சர்வதிகாரப் போக்கே தலைதூக்கியுள்ளது. ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணி பிரதிச் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கொட்டகலையில் ஒரு ஊடக சந்திப்பொன்றில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், கட்சியின் எவ்வித அனுமதியுமின்றி பிரதிச் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக எடுத்துள்ள தீர்மானம் கட்சியை சிதைத்துவிடக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அனுஷா சந்திரசேகரன் மேலும் கூறியுள்ளதாவது, “மலையக மக்கள் முன்னணி என்பது சந்திரசேகரன் என்பவரினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு தனித்துவமான கட்சியாகும்.

அவர் இருந்த காலத்தில் கட்சியில் ஜனநாயகத் தன்மை காணப்பட்டது. இன்று அது சிதைவடைந்து வருகின்றது. கட்சி என்ற வகையில் நிதிச் செயலாளர் என்பவருக்கு ஊடகங்களில் அறிக்கை வெளியிட முடியாது.

மேலும் நாடாளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் முடிவு எடுக்கப்படவிருந்த நிலையில், அது சாத்தியப்படாமல் போனது. 

எனினும் அண்மையில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணனினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பொன்றில் கட்சியில் மூன்று பேருக்கு மாத்திரமே தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் அனுஷா சந்திரசேகரன் வேண்டுமானால் தனிப்பட்ட ரீதியில் போட்டியிடலாம் என தெரிவித்திருந்தார். 

மேற்படி அறிவிப்பு கூட கட்சியின் யாப்புக்கு முரணானது. ஏனென்றால் கட்சி யாப்பின்படி சபையின் தலைவர்கள், மத்திய குழு மற்றும் தேசிய சபை என்பன இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்தின் படியே நடக்க வேண்டும்.

ஆனால் தற்போது கட்சியில் சர்வாதிகாரப் போக்கே காணப்படுகின்றது. நிதிச் செயலாளரினாலும் தலைவரினாலுமே தன்னிச்சையாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனாலேயே மக்கள் மாற்று தரப்பினரை விரும்புகின்றனர். எனவேதான் தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment