நாட்டின் அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு முக்கியம், மேற்கு நாடுகளின் கல்வி முறைமைகளே போதிக்கப்படுகின்றது - உபவேந்தர் பேராசிரியர் நாஜிம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

நாட்டின் அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு முக்கியம், மேற்கு நாடுகளின் கல்வி முறைமைகளே போதிக்கப்படுகின்றது - உபவேந்தர் பேராசிரியர் நாஜிம்

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆய்வரங்குகளில் பங்கு பற்றுவதன் மூலம் தமது உயர் கல்வியை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு வழியமைக்குமென, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக இளம் கற்கை மாணவர்களின் முதலாவது ஆய்வரங்கு நேற்று (20) தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

சமூக ஆய்வுக்கான மாணவர் ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வெளியேறுகின்ற மாணவர்கள் வெறுமனே பட்டதாரியாக மட்டும் வெளியேறாமல் இவ்வாறான ஆய்வு அரங்குகள் மூலம் உங்களது திறமையை வளர்த்துக் கொள்வதால் சிறந்த ஒரு கல்வி மாணாக மாற முடியும். இதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தித் தந்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் பல சர்வதேச தேசிய ஆய்வரங்குகளை நடாத்தி சர்வதேச ரீதியில் காலடி வைத்துள்ளது. அந்த வகையில் இவ்வாய்வரங்கை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் மேற்கு நாடுகளின் கல்வி முறைமைகளே போதிக்கப்படுகின்றது. மாணவர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டும். அப்போதுதான் எமது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றதென்றார்.

(எம்.எஸ்.எம். ஹனீபா - ஒலுவில் நிருபர்)

No comments:

Post a Comment