சிங்கள மொழிக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்ட பனை அபிவிருத்தி சபை பெயர்ப் பலகையில் மாற்றம் - அமைச்சர் விமல் வீரவன்ச நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

சிங்கள மொழிக்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்ட பனை அபிவிருத்தி சபை பெயர்ப் பலகையில் மாற்றம் - அமைச்சர் விமல் வீரவன்ச நடவடிக்கை

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்து வைக்கப்பட்ட நிலையில், சிங்கள மொழிக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டதை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச குறித்த பெயர்ப் பலகையை நேற்று (20) திங்கட்கிழமை மாலை மாற்றியமைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தோடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னாரிற்கு கடந்த சனிக்கிழமை (18) விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த அமைச்சர் விமல் வீரவன்ச இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அன்றைய தினம் காலை 10.00 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்) திடீர் விஜயம் செய்திருந்தார்.

அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ச வைபவ ரீதியாக திறந்து வத்தார். வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

அந்தப் பெயர்ப் பலகையில் சிங்களத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கப்பட்டிருந்ததை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச, திறக்கப்பட்ட அந்த பெயர்ப் பலகையை கழற்றி விட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும் படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

அதற்கமைவாக உரிய அதிகாரிகள் குறித்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (20) மாலை குறித்த பெயர்ப் பலகை மாற்றப்பட்டு உரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் அமைச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த சனிக்கிழமை மன்னாரில் திறந்து வைத்த குறித்த பெயர்ப் பலகையில் இருந்த குறையை அந்த நேரத்திலேயே அதன் தலைவருக்கு நான் ஆணையிட்டதைத் தொடர்ந்து அது சரி செய்யப்பட்டிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே விமல் வீரவன்ச கடந்த ஆண்டு யாழ் விமான நிலையம் தொடங்கப்பட்ட போது அங்கே பெயர்ப் பலகையில் தமிழில் முதலாவதாக எழுதியிருந்ததை கடுமையாக விமர்சித்து கூட்டங்களில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்)

No comments:

Post a Comment