பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளர்களுக்கு தேசியப் பட்டியல் மூலம் வாய்ப்புகளை வழங்குவதை தடுக்கும் புதிய சட்டமொன்றை பெப்ரல் அமைப்பு தயாரித்துள்ளதுடன், குறித்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக விரைவில் அரசாங்கத்திற்கு கையளிக்க உள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
எமது நாட்டின் அரசியல் கலாசாரம் சீரழிவதற்கு தேசியப் பட்டியல் மூலம் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உள்வாங்கப்படுவது முக்கிய காரணமாகவுள்ளது. இந்த விடயத்துக்கு எதிராக கடந்த காலத்தில் பொதுமக்கள் பாரிய குரலை எழுப்பியுள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த விடயம் பேசுபொருளாகவிருந்தது.
தேசியப் பட்டியல் மூலம் தோல்வியடைந்த வேட்பாளர்களை உள்வாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அதிகமான பணம் தேர்தல்களில் அள்ளி வீசப்படுவதால் சில நேர்மையான வேட்பாளர்களும் தோல்வியடைகின்றனர். அவ்வாறானவர்களுக்கு சில வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் பிரகாரம் 20 சதவீதம் அல்லது இரண்டு தேசியப் பட்டியல்களே தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளர்களுக்கு வழங்க முடியும். 40 சதவீதம் பொது பட்டியல் அடிப்படையிலும் ஏனைய 40 சதவீதத்திற்கு புத்திஜீவிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. விரைவில் குறித்த உத்தேச சட்டமூலத்தை அரசுக்கு சமர்ப்பிக்கவுள்ளோம். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மேற்படி சட்டத்தை நிறைவேற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:
Post a Comment