சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஏனைய நாடுகளுக்கும் பரவுவதை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கை இப் பிரகடனத்துக்கு கட்டுப்படுகின்ற போதும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று 99.9 சதவீதம் கட்டுப்பாட்டில் உள்ளதனால் மக்கள் இவ் விடயம் தொடர்பில் பதற்றமின்றி விழிப்புணர்வுடன் செயற்படுவதே போதுமானதாகும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
இதேவேளை உடனடி அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஸ்கேனர் சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதாகவும் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, சீனப் பிரஜைகள் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதன் காரணமாகவே அரசாங்கம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக செயற்பட்டதன் மூலமே இந்நோய் தாக்கத்தை நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இதே குழுச் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதுவரை நாட்டில் ஒரேயொரு சீனப் பிரஜையே கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவரும் தற்போது பெருமளவில் குணமடைந்துள்ளார். அதனால் எமது நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
கொரோனா வைரஸை நாட்டுக்குள் வரவிடாமல் கட்டுப்படுத்துவதற்காக அனைவராலும் எடுக்கப்பட்ட முயற்சிகளை நான் பாராட்டும் அதேநேரம் அவர்களுக்காக நன்றிகளையும் தெரிவித்துகொள்கின்றேன்.
எமது நாடு மிகச் சிறியதாக இருந்தபோதிலும் ஆரம்பம் முதலே நாம் பல சவால்களை வென்றுள்ளோம். அந்த வகையில் இந்நோய்த் தொற்றுக்கான சவாலையும் எம்மால் முறியடிக்க முடியும். இதுவரை 99.9 சதவீதம் எம்மால் இந்நோய்த் தொற்றை முறியடிக்க முடிந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் பயணிகளின் உடல்நிலையை கண்டறிவதற்காக ஸ்கேனர் பொருத்தியுள்ளோம். அதனை தவிர இங்கு வரும் சீனப் பயணிகள் செல்லும் அனைத்து இடங்கள் பற்றிய தகவல்களையும் விமான நிலையத்தின் அதிகாரிகள் பெற்று அவற்றை கணனி மயப்படுத்துகின்றனர். இதனைக் கொண்டு சுகாதார வைத்திய அதிகாரிகள் அவர்கள் செல்லும் இடங்களை கண்கானித்து வருகின்றனர்.
இவற்றுக்கு மேலதிகமாக அவசர நிலமைகளின் போது சிகிச்சையளிப்பதற்கென நாடு முழுவதும் 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேவையான 60 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் பெற்று கொடுக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைகளை துரிதப்படுத்தியதன் காரணமாகவே எம்மால் உடனடியாக சிகிச்சையை ஆரம்பிக்க கூடியதாக இருந்தது என்றார்.
இச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர். அனில் ஜாசிங்க கருத்து தெரிவிக்கும்போது,
நாட்டின் சுகாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அடிக்கடி சுகாதார அமைச்சருடன் தொடர்பில் இருந்தார். அமைச்சர் ஒரு நாளைக்கு பல தடவைகள் சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சீனா எடுத்துள்ள முயற்சிகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. எனினும் உலகில் சில நாடுகள் ஆரோக்கியமான சுகாதாரம் கொண்ட நாடுகளாகவும் சில நாடுகள் ஆரோக்கியமற்ற சுகாதாரம் கொண்ட நாடுகளாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் ஆபிரிக்கா போன்ற நாடுகள் ஆரோக்கியமற்ற சுகாதார நிலைமைகளை கொண்டுள்ளன. இவ்வாறான நாடுகளுக்கு இந் நோய்த்தொற்று ஏற்பட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதன் காரணமாகவே தற்போது சுகாதார அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனை காரணமாக கொண்டு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வர்த்தக செயற்பாடுகளை இரத்துச் செய்ய வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கப்பல்களில் வரும் சீனப் பயணிகள் தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக அனைத்து துறைமுகங்களிலும் வைத்தியர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment