சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ் : சர்வதேச அவசர நிலை குறித்து ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2020

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ் : சர்வதேச அவசர நிலை குறித்து ஆலோசனை

புதிய கொரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் திபெத்திலும் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் அனைத்து பிராந்தியங்களிவும் புதிய வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 7,711 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் சீனாவுக்கு வெளியில் குறைந்தது 20 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நோய் தாக்குதலுக்கு ஆளாகியவர்களில் 124 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்கள் தவிர நோய் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 88 ஆயிரத்து 693 பேர் தனியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 2 ஆயிரத்து 364 பேர் நோய் அறிகுறி இல்லை என்பதால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஒரு சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது குறித்து பேச உலக சுகாதார அமைப்பு இன்று கூடவிருக்கிறது.

“கடந்த ஒரு சில தினங்களில் குறிப்பாக சில நாடுகள், குறிப்பாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது எமக்கு கவலையை அளிக்கிறது” என்று உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொன் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.

வியட்நாம், ஜெர்மனி மற்றும் ஜப்பானில் இந்த வைரஸ் சீனாவில் இருந்து வந்தவர்களிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“மிகப்பெரிய பாதிப்பை எற்படுத்த வாய்ப்பு இருந்தபோதும் சீனாவுக்கு வெளியில் இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

2000 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தொற்றை விடவும் சீனாவில் தற்போது புதிய வைரஸ் தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே காணப்படுகிறது. சார்ஸ் வைரஸும் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதோடு கடுமையான சுவாச நோயை ஏற்படுத்துகிறது.

இந்த வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்தொன்றை மேம்படுத்துவதில் ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் ஜுன் அல்லது ஜுலையில் சாத்தியமான ஒரு தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரீட்சிப்பதற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆய்வுகூடம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

வெளிநாட்டினர் வெளியேற்றம்
புதிய கொரோனா வைரஸ் மையம் கொண்டுள்ள வுஹான் நகரில் இருந்து வெளிநாட்டினர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மூடப்பட்டிருக்கும் இந்த நகரில் இருந்து தமது சொந்த நாட்டுக்குச் செல்ல இவர்கள் முயன்று வருகின்றனர்.

இவ்வாறு சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படும் அனைவரையும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைத்திருக்கும் நடவடிக்கையை பிரிட்டன், அவுஸ்திரேலியா, தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தக் காலப்பிரிவில் இவர்களிடம் நோய் அறிகுறிகள் இருப்பதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியா, சீனாவில் இருந்து வருபவர்களை கிறிஸ்மஸ் தீவில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடியேறிகளை தடுத்து வைக்க பயன்படும் இந்த தீவு அவுஸ்திரேலியாவில் இருந்து 2,000 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

சிங்கப்பூர் தனது பிரதான நிலத்தில் இருந்து வட கிழக்கில் இருக்கும் புலோ உபின் தீவில் தனிமைப்படுத்தப்படும் வசதியை அமைத்துள்ளது.

எனினும் தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களைத் தனிமைப்படுத்தும் இடங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வேளையில், அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே இன் அமைதியை பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சோலுக்குத் தெற்கே உள்ள அசான், ஜின்ச்சியோன் நகரங்களில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் நிலையங்களுக்குச் செல்லும் வழிகளைத் தடுக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தும் நிலையங்கள் உள்ள வட்டாரங்களில் வசிப்போர் கவலைப்படத் தேவையில்லாத வகையில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

மலேசியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மலேசியப் பிரதமர் மஹாதீர் மொஹமட் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் - சீனா இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் முகக் கவசங்கள் வாங்குவதற்காக மக்கள் மருந்துக்கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். தேவை அதிகரித்ததால் முகக்கவசங்களின் விலை உயர்ந்துள்ளது. எனினும் பதற்றமானமனநிலையில் இருக்கும் தங்களுக்கு விலை ஒரு பொருட்டல்ல என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா எப்படிக் கையாள்கிறது
இந்த வைரஸ் தொற்றை கையாளும் சீனாவின் திறனை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருக்கும் நிலையில், அந்நாட்டின் வெளிப்படைத் தன்மை குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வைரஸை ஒரு ‘பிசாசு’ என்று அழைத்த சீன ஜனாதிபதி ஷி ஜின்பின், அதனை வீழ்த்துவதாக உறுதி அளித்திருந்தார்.

கிட்டத்தட்ட அனைத்து உயிரிழப்புகளும் சீனாவின் மத்திய மாகாணமான ஹுபெய்யில் இடம்பெற்றுள்ளது. இந்த மாகாணம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வுஹானை தலைநகராகக் கொண்ட இந்த மாகாணத்தின் 60 மில்லியன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு நகரங்கள் முடக்கப்பட்டு, பல்வேறு பயணத் தடைகள் விதிக்கப்பட்டு சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஹுபெய் மாகாணத்தில் இருப்பவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அவர்களது தொழில் வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான சீன பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி உலகின் பல நாடுகளும் தமது பிரஜைகளை கேட்டுக்கொண்டுள்ளன.

சீனாவுக்கான பயணங்களை பல சர்வதேச விமான சேவைகளும் இடைநிறுத்தி இருப்பதோடு கூகுள், ஐகீ, ஸ்டர்பக்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் சீனாவில் தனது வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியுள்ளன.

2020 பருவத்திற்கான அனைத்து போட்டிகளும் பிற்போடப்படுவதாக சீன கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

புது வகை கொரோனா வைரஸால் நிமோனியா காய்ச்சல் உட்பட இதர சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் இருமல், தும்மல் ஆகியவற்றால் அந்த வைரஸ் பரவக்கூடும் என்றும் சீனா தெரிவித்தது.
சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ''ஒட்டுமொத்த உலகமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ''கொரோனா வைரஸ் அளிக்கும் சவால் கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் குறித்து வியாழக்கிழமையன்று நடக்கவுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் சந்திப்பில் இந்த வைரஸால் உலக அளவில் சுகாதார அவசரநிலை தோன்றியுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.

ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது .

இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர்.

இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.

சீனாவுக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று பயணிக்கவுள்ளதாக தெரிவித்த மைக் ரயான், அங்குள்ள மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை சர்வதேச குழு அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

''மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று அவர் கூறினார்.

முன்னதாக இந்த வாரத்தில் சீனாவுக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ''தற்போதைய சூழலில் சீனாவுக்கு உலகின் ஆதரவு மிகவும் தேவை'' என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment