இன்றைய அரசு தற்போது ஒரு காபந்து அரசாகவே இருக்கின்றது. தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர்தான் முன்வைக்க முடியும் என்பதே யதார்த்தம். எமது மாவட்டத்தின் சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்ற அபிவிருத்திகளை நாம் முன்வைக்க வேண்டும் என மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்குத் தமிழர்களுக்காக பெற்றுத் தந்த தீர்வுதான் என்ன? வடக்கு, கிழக்கு இணைப்பதாயின் எந்த அடிப்படையில் இணைக்கப் போகின்றீர்கள்? சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் கிழக்கு மாகாணத்தில் அந்த நிலையை அடைய முடியுமா? வடக்கு, கிழக்கு இணைய வேண்டும் என்பது தமிழர்களின் அபிலாசையாகும்.
ஆனால் அது இணையாத தருணத்தில் கிழக்கில் மழுங்கிப் போய்க் கொண்டிருக்கும் தமிழினம் என்ன அடிப்படையில் தமது எதிர்காலத்தை கட்டமைத்துக் கொள்வது? கிழக்குத் தமிழர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசியலிலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் இருக்கின்றது. தமிழரசுக் கட்சி வெறுமனே வட மாகாணத்தின் நலன்களை மட்டும் கருதாமல் கிழக்கு மாகாணத்தின் நிலையையும் உணர வேண்டும்.
ஜனாதிபதிக்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர். அரசும் பல விடயங்களை உணர வேண்டியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி குறித்து பேசும் அரசு தமிழர்களுக்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். அத்தோடு அரசியற் கைதிகளை விடுவிக்கும் விடயத்திலும் சரியான முடிவுகளை எடுத்து உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பல சவால்களை எமது மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் இருக்கவும் முடியும் அல்லது தனித்தனியாக இருந்து அவர்கள் ஒன்றிணையவும் முடியும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை விட தமிழ் மக்களின் தேவை கருதி அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்.
தமிழர்களின் தீர்வு என்ற விடயத்தில் அனைவரும் ஒருமித்த கருத்துகளை முன்வைக்கலாம். அதே நேரத்தில் தமிழர்களின் தேவை என்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு திட்டங்களை முன்வைக்க முடியும்" என்று அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
துதி மோகன்
No comments:
Post a Comment