ஒரு கிலோ கிராம் நெல் ஐம்பது ரூபாவுக்கு வாங்கப்படும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும் மட்டக்களப்பில் அத்தீர்மானம் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துக் கூறியதையடுத்து, உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் சபை உரிய விலையில் அடுத்த வாரத்திற்குள் 50 ரூபா விலைக்கு ஒரு கிலோ கிராம் நெல்லை வாங்கும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் முன்னேற்றக் கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"மட்டக்களப்பில் தற்போது சர்ச்சையாகவும், விவசாயிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயமாகவும் நெல் விலை குறைவாக உள்ள பிரச்சினை காணப்படுகின்றது. அரசாங்கம் ஒரு கிலோ நெல்லை ஐம்பது ரூபாவுக்கு வாங்குவதென்ற தீர்மானத்தை எடுத்திருந்த போதிலும் மட்டக்களப்பில் இன்னும் அத்தீர்மானம் அமுல்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இந்த நிலைமையினை எடுத்துக் கூறினேன். அவர்கள் இதனை விளங்கிக் கொண்டு உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் சபை உரிய விலையில் அடுத்த வாரத்திற்குள் நெல்லை வாங்கும் என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார்கள்.
அத்துடன் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தவிசாளரும் இது தொடர்பில் என்னிடம் உறுதியளித்தார். திறைசேரியும் அதற்கான நிதியை உடனடியாக வழங்க இருக்கின்றது" என்று அரண் தம்பிமுத்து கூறினார்.
"கிழக்கில் இப்பிரச்சினையை விவசாயிகள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் பொலனறுவையில் இடம்பெறும் நெல் அறுவடையை வைத்துத்தான் அரசாங்கத்தின் நெல் வாங்கும் செயற்பாட்டைத் தொடங்குவார்கள் என்பது வழமையாக இருக்கின்றது.
அங்கு பெப்ரவரி மாதத்தில்தான் அறுவடை மேற்கொள்ளப்படும். இதற்கான ஒரு மாற்றுவழியை உடனடியாகத் தேட வேண்டும் என்ற விடயத்தையும் எடுத்துக் கூறியிருக்கின்றேன். அத்துடன் ஜனாதிபதியின் திட்டமிடல் குழுவொன்று மட்டக்களப்பிற்கு வரவும் இருக்கின்றது.
அதேபோல் எமது விவாசயிகள் நீர்ப்பாசனத்திலும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அசமந்தப் போக்கில் நீர்ப்பாசனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று நெல் சந்தைப்படுத்தும் சபைக்கான காரியாலயம் கூட மட்டக்களப்பில் இல்லை.
இவற்றையெல்லாம் அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம். அதற்கான நல்ல தீர்வை ஜனாதிபதியும், பிரதமரும் எடுப்பார்கள் என்று நம்புகின்றோம். எனவே ஐம்பது ரூபா அடிப்படையில் நெல் அடுத்த வாரத்தில் இருந்து நெல் சந்தைப்படுத்தும் சபையால் வாங்கப்படும்" என்று விளக்கினார் அருண் தம்பிமுத்து.
துதி மோகன்

No comments:
Post a Comment