ஏ.ஆர்.எம் ஜிப்ரி எனும் பன்முக ஆளுமை மிக்க கலங்கரை விளக்கொன்று அணைந்து போனது - செய்யித் அலி ஸாஹிர் மௌலானா எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

ஏ.ஆர்.எம் ஜிப்ரி எனும் பன்முக ஆளுமை மிக்க கலங்கரை விளக்கொன்று அணைந்து போனது - செய்யித் அலி ஸாஹிர் மௌலானா எம்.பி.

எனது ஆத்மார்த்தமான நண்பரும், சிரேஷ்ட அறிவிப்பாளரும், நாடே போற்றும் நல் ஆசானுமான ஏ.ஆர்.எம் ஜிப்ரி அவர்களது மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா வெளியிட்டுள்ள அனுதாபக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

எனக்கும், அவருக்குமான நட்பு நீண்ட கால வரலாற்றினை கொண்டதானது, வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என் மீதான நட்பினாலும் அன்பினாலும் தனது ஆசிரிய தொழில், குடும்பம் என அனைத்தையும் தாண்டி எனது கடந்த கால அரசியல் செயற்பாடுகளில் இரவு பகலாக முழு மூச்சுடன் செயற்பட்ட அவரது தியாக உணர்வினை நானும் எனது மட்டக்களப்பு மக்களும் ஒரு போதும் மறந்து விட மாட்டோம்.

அன்றைய பயங்கரமான சூழல் நிலவிய காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி தொட்டி எல்லாம் உயிரையும் துச்சமாக மதித்து என்னுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றி என் வெற்றிப் பயணத்திற்கான ஒரு வலக்கரமாகவும் கலங்கரை விளக்காகவும் செயற்பட்ட ஒருவராக அவர் திகழ்ந்தார்.

சமூக உணர்வும் ஆளுமையும் நிறைந்த எனது நண்பனான ஏ..ஆர்.எம் ஜிப்ரி அவர்களது மறைவு என்றுமே ஈடுசெய்ய முடியாததாகவும், எவராலும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாகவும், அவரது நட்புக் காலத்தின் ஒவ்வொரு நொடிகளுக்கு ஊடாகவும், சுவாரஷ்யமான நினைவுச் சம்பவங்களின் மூலமாகவும் அவரது காந்தக் குரலின் ஊடாகவும் அவர் எங்களோடு என்றுமே நினைவுகளாக வாழ்ந்து கொண்டே இருப்பார்.

உலகெங்கும் புகழ்பூத்த கண்ணியமான ஒலி/ஔி பரப்பாளனாகவும், நாடெங்கும் அறிமுகமான ஒரு சிறந்த ஆசானாகவும் திகழ்ந்த, ஒரு பன்முக ஆளுமையான அன்னாரை வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு மேலான சுவனத்தினை பரிசளித்திட வேண்டும் என பிரார்த்திப்பதோடு, அவரது இழப்பினால் துயருற்று நிற்கும் உறவுகளின் உள்ளங்களில் விரைவில் அமைதி திரும்பிட வேண்டும் எனவும் இறைவனை இறைஞ்சுகிறேன்.

No comments:

Post a Comment