கலைக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களை நியமிக்கும் பிரதிநிதிகள் பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 19, 2020

கலைக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்களை நியமிக்கும் பிரதிநிதிகள் பரிந்துரை

கலைக்கப்பட்ட கோப் (COPE) உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கான உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

17 பேர் கொண்ட குறித்த தெரிவுக் குழுவில் 09 ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் மற்றும் 08 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

அதற்கமைய, சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபாலா டி சில்வா, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொகுகே, மஹிந்தா யாபா அபேவர்தன, ரோஹித அபேகுணவர்தன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

தெரிவுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக, லக்‌ஷ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக ரணவக, மனோ கணேசன், நிரோஷன் பெரேரா, மாவை சேனாதிராஜா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவுக் குழு உறுப்பினர்களின் பெயர்கள், நாளை (21) சபாநாயகரால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நாளைய தினமே கூடி, கோப் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற குழுக்களுக்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை (16) இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தேர்வுக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர்கள் கோரப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், தங்கள் பிரதிநிதிகளை பாராளுமன்ற செயலகத்தில் ஒப்படைத்திருந்தன.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து, தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு டிசம்பர் 02 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது அமர்வு கடந்த ஜனவரி 03ஆம் திகதி ஆரம்பமானது. புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் உள்ளிட்ட ஒரு சில குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment