எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் - வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் - வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். 

அரசியலமைப்பின் 70 (1) ஆம் பிரிவின் படி பாராளுமன்றக் கூட்டத் தொடரினை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கடந்த டிசம்பர் 3ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார். 

ஜனவரி 3ஆம் திகதி புதிய பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முற்பகல் 9 மணிக்கு விசேட அதிதிகளின் வருகையுடன் ஆரம்பமாகிறது. 

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை முதலில் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகையும், அதன் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வருகையும் இடம்பெறும். அவர்களைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தருவார். 

சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியை வரவேற்பார்கள். ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைப்பதுடன், மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும். 

படைக்கல சேவிதர், பிரதிப் படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு தொடங்கும். 

1947 ஆண்டு முதல் 50 இக்கும் மேற்பட்ட தடவைகள் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுப் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

1978ஆம் ஆண்டின் பின்னர் மாத்திரம் 25 தடவைக்கு மேல் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் அவர்களின் தலைமையில் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரானது வைபவ ரீதியாக 1947 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆளுநர் அவர்களின் சிம்மாசன உரை இடம்பெற்றது. 

இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் 1954 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு மகாராணியினது சிம்மாசன உரை அரசாங்கத்தினால் சபையில் வாசிக்கப்பட்டது. 

அதன் பின்னரான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் கூட்டத் தொடர்கள் வைபவ ரீதியாகவும் வைபவ ரீதியற்ற முறையிலும் ஆரம்பிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.    

No comments:

Post a Comment