சீனாவில் உள்ள மாணவர்களின் முதல் குழு 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு - ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் தயார் - கொரோனா தொடர்பில் விளிப்புடன் அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

சீனாவில் உள்ள மாணவர்களின் முதல் குழு 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு - ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் தயார் - கொரோனா தொடர்பில் விளிப்புடன் அரசாங்கம்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வூஹான் (Wuhan) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வூஹான் மாகாணத்திற்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவதை சீன அதிகாரிகள் தற்போது தடை செய்துள்ளனர். தடை நீக்கப்பட்டதும் அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சிச்சுஆன் மாகாணத்தில் செங்டு நகரில் உள்ள சுமார் 150 மாணவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளுக்கான மேலதிகச் செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

தெனின் நகரில் உள்ள மேலும் 30 மாணவர்கள் தொடர்பான தகவல்கள் தூதரகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களும் விரைவாக அழைத்து வரப்படவுள்ளனர்.

சீனா எங்கும் பரந்திருக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்தார்.

தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையே We chat தொடர்பாடல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் நோய்த் தொற்று தடுப்புக்கு உட்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எவரேனும் காய்ச்சல் நிலைமைக்குள்ளாகி இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர். அத்தகையவர்களது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி அனைத்து சுகாதார அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

நோய் கண்காணிப்பு வசதிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் உள்ளது. வைத்திய உபகரணங்கள் அல்லது இரசாயனப் பொருட்களை கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டால் விமானத்தின் மூலம் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment