அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இவ்வாண்டு கொழும்புக் கம்பன் விழா எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ஆம் திகதி வரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் கம்பன் கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 40 வருடங்கள் பூர்த்தியாவதுடன் கொழும்பில் அதன் பணிகள் தொடங்கி இவ்வாண்டுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனால் இவ்வாண்டுக் கம்பன் விழா இறையருளை முன்னிட்டு கொழும்புக் கம்பன் கழகத்தின் வெள்ளி விழாவாக மிகப் பிரமாண்டமாக நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டுக் கம்பன் விழாவின் முதல் நாளான ஜனவரி 31ஆம் திகதி வெள்ளி மாலை 5.00 மணிக்கு, இராமகிருஷ்ண தோட்டம், இல. 12 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்யலஷ்மி கோயிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் சீதா இராம விக்கிரகங்களும் ஊர்வலமாக விழா மண்டபம் நோக்கி எடுத்து வரப்படவுள்ளன. இவ் ஊர்வலத்தில் நம் நாட்டின் பல பாகங்களிலிருந்து வருகைதரும் பிரமுகர்களும் இந்தியா, மலேசியா, அவுஸ்திரேலிய, பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைதரவுள்ள அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கையின் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் மங்கள இசையும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையும், மங்கையர்களின் நிறைகுட பவனியும், நடன மங்கையர்களின் அபிநய பவனியுமாக இவ் ஊர்வலம் சிறப்புற நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் இவ்விழாவின் திருநாள் மங்கல நிகழ்வை திருக்கேதீஸ்வரர் ஆலயத் திருப்பணி சபையின் இணைச் செயலர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைக்க, யாழ். மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவருமான ஜெ. விஸ்வநாதன் தலைமையேற்று நிகழ்வுகளை நடாத்தவுள்ளார்.
விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள்:
மலேசிய நாட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையின் முன்னாள் பிரதியமைச்சரான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணனும், புதுச்சேரி சட்ட சபையின் சபாநாயகர். வி.பி.சிவக்கொழுந்துவும், இந்தியப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தற்போதைய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினருமான இல. கணேசனும், இம்முறை விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
விழாவில் கலந்துகொள்ளும் நம்நாட்டு அரசியல் பிரமுகர்கள்:
கால்நடைவள கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், கல்வி இராஜாங்க முன்னாள் அமைச்சர், வே. இராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், வட மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன், கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க, சைவமங்கையர் கழகத் தலைவி. திருமதி சிவானந்தி துரைசாமி, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், சு. அருமைநாயகம் முதலிய பிரமுகர்கள் பலரும் இவ்வாண்டு விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூல் வெளியீடும், இறுவட்டு வெளியீடும்:
இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கொழும்புக் கம்பன் கழக வெள்ளி விழா மலரும், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் பதினைந்தாண்டின் நிழற்படத் தொகுப்பும், கம்பன் விழா 2018, இசைவிழா 2018, 2019ஆகியவற்றின் இறுவட்டுகளும் வெளியிடப்படவுள்ளன.
சமூக நிதியுதவி:
கழகத்தின் இவ்வாண்டு விழாவில் சமூக நிறுவனங்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டிருந்தும் கல்வியில் சாதனை செய்த மாணவர்கள், வளர்ச்சிக்கான துணை தேவைப்படும் குடும்பங்கள் என பலதரப்பட்ட பேருக்கும் நிதியுதவிகளும் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டு கம்பன் புகழ் விருது பெறும் பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
கொழும்பு கம்பன் கழகம் உலகளாவித் தமிழ்ப்பணி செய்த சான்றோர் ஒருவருக்கு கம்பன் புகழ் விருதினை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
“வி.ரி.வி. பவுண்டேஷன் நிறுவியுள்ள வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் இக்கம்பன் புகழ் விருது, இவ்வாண்டு இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சினிமா பின்னணிப்பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு அவர்தம் இசைத்தமிழ் பங்களிப்பினை மனங்கொண்டு வழங்கப்படவுள்ளது. விருதுக் கேடயம், பொன்னாடை, இந்தியப் பணம் ரூபா ஒரு இலட்சம் பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய இவ்விருதினை, கம்பன் விழாவின் நிறைவு நாளன்று மாலை கழகப்பெருந் தலைவர் நீதியரசர் கெளரவ ஜெ.விஸ்வநாதன் வழங்கிக் கெளரவிக்கவுள்ளார்.
சான்றோர் கெளரவம் பெறும் நம்நாட்டுப் பெருமக்கள் அறுவர்:
சுயநலமற்ற செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் கொழும்புக் கம்பன் கழகம் கெளரவித்து வருகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு கெளரவத்துக்குரியவர்களாக, உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, புகழ்பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா), பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, முன்னாள் பிரதமரின் செயலாளர் வே. சிவஞானசோதி, எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எம். நஹியா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குரியதான கெளரவங்களும் விழாவின் நிறைவு நாளில் சகல மரியாதைகளுடனும் வழங்கப்படவுள்ளன.
இவ்வாண்டுக்கான அறக்கட்டளை விருதுகள் பெறுவோர்:
கம்பன் விழாவில் வருடாந்தம் ஐந்து அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு நாவலர் நற்பணி மன்றத்தின் தலைவர் அமரர் என். கருணை ஆனந்தன் நிறுவியுள்ள நாவலர் விருதினை தமிழ் நாட்டைச் சேர்ந்த சிறந்த உரையாசிரியரான பள்ளத்தூர் பழ.பழனியப்பனும், தமிழ் நாடு திருக்குவளை இராம ஸ்ரீனிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளையினர் நிறுவியுள்ள விபுலாநந்தர் விருதினை நாட்டிய கலாமந்திர் இயக்குநர், நடன ஆசிரியை கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனும், கவிக்கோ அமரர் அப்துல் ரகுமான் (தமிழ் நாடு) நிறுவிய மகரந்தச்சிறகு விருதினை இலங்கையின் சிறந்த கவிஞர்களில் ஒருவரான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீனுக்கும், புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் (தமிழ் நாடு) நினைவாக குடும்பத்தினர் நிறுவியுள்ள நுழைபுலம் ஆய்வு விருதினை பேராசிரியர் ப. புஸ்பரட்ணத்துக்கும், புகழ்பெற்ற தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா நிறுவியுள்ள ஏற்றமிகு இளைஞர் விருதினை எழுத்தாளர் தீபச்செல்வனும் பெற்றுக் கொள்கின்றனர். கேடயம், பொன்னாடை, ரூபா இருபதாயிரம் பொற்கிழி ஆகியவற்றுடன் கூடியதாக இவ்விருதுகள் முதல்நாள் விழாவில் வழங்கப்படவுள்ளன.
இளையோர் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கான பரிசளிப்பு:
அமரர் துரை. விஸ்வநாதன், அமரர் பொன். பாலசுந்தரம், அமரர் இலக்கிய வித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட பேச்சு, கவிதை, திருக்குறள் மனனப் போட்டிகளிலும், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் ஆதரவுடன் இவ்வாண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் பரிசில்களும் இரண்டாம் நாள் விழாவில் வழங்கப்படவுள்ளன.
கம்பன் விழா நிகழ்ச்சிகள்:
இவ்வாண்டுக் கம்பன் விழாவில் எழிலுரை, நாட்டிய அரங்கம், சுழலும் சொற்போர், வழக்காடு மன்றம், கவிநய அரங்கம், பட்டிமன்றம், சிந்தனை அரங்கம், கவியரங்கம், இலக்கிய ஆணைக்குழு, கருத்தரங்கம், நாடக அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவில் கலந்துகொள்ளும் பிறநாட்டு, நம்நாட்டு அறிஞர்கள்:
இவ்வாண்டு தமிழ்நாட்டு பிரபல தொழிலதிபர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி விருந்தினராய்க் கலந்து கொள்வதோடு, விழா நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டின் சிறந்த அறிஞர்களான திருமதி பாரதி பாஸ்கர், திருமதி கே. சுமதி, டாக்டர் பிரியா இராமச்சந்திரன், புலவர் இரா.சண்முகவடிவேல், புலவர் மா. இராமலிங்கம், பிரபல திரைப்பட பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர' பிறைசூடன், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார், மதுரை எம். சண்முகம், முனைவர் இரா. மாது, பேராசிரியர் ரெங்கராஜா ஆகியோரும், அவுஸ்திரேலியாவிலிருந்து பேச்சாளர்களான தி. திருநந்தகுமார், க. குமாரதாசன், ஜெ. ஜெயராம் ஆகியோரும், நம்நாட்டைச் சார்ந்த பிரபல பேராசிரியர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் இவ்வாண்டு விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
புத்தகக்கண்காட்சி:
விழா நடைபெறும் ஐந்து நாட்களிலும் மண்டபவாயிலில் அகில இலங்கைக் கம்பன் கழகம் மற்றும் பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகியன புத்தகக் கண்காட்சி ஒன்றினை நடாத்தவுள்ளன. இக் கண்காட்சியில் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் மற்றும் கழக விழாக்களின் இறுவட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.
இரசிகர்களுக்கு வேண்டுகோள் :
கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகைதந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்றைய தமிழ் இரசிகர்களுக்கு ஊடகங்கள் மூலம் விழாவிற்கான அழைப்பினை கம்பன்கழகம் மனமகிழ்வுடன் விடுக்கிறது.
No comments:
Post a Comment