சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு - சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் உயிரிழந்தார் - இதுவரை இரண்டாயிரம் பேர் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு - சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் உயிரிழந்தார் - இதுவரை இரண்டாயிரம் பேர் பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர். அதன்பின் இந்த வைரஸ் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. அத்துடன் தற்போது 30 மாகாணங்களுக்கு இதுபரவியுள்ளது. 

முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேரும், பின் 6 பேரும் பலியாகினர். பின்பு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 

ரயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது. 
பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள். சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் 15 பேர் இன்று பலியாகினர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் 2 ஆயிரம் பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொடர்பில் பேசிய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், சீனா தற்போது கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அங்கு நடைபெறும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களை கைவிட்டு, வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க வுஹான் உட்பட 12 நகரங்களில் ராணுவத்தின் மருத்துவத் துறையை சீன அரசு களமிறக்கி வருகிறது. 

அதன்படி, ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்யுமாறு ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதையடுத்து 40 க்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment