ரஞ்சனுடன் தொலைபேசி உரையாடல் - நீதிபதி பத்மினி ரணவக சுமார் 3 மணி நேர வாக்குமூலம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

ரஞ்சனுடன் தொலைபேசி உரையாடல் - நீதிபதி பத்மினி ரணவக சுமார் 3 மணி நேர வாக்குமூலம்

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக, கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) சுமார் 3 மணி நேர வாக்குமூல பதவின் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் குறித்து அவரிடம், கொழும்பு குற்றப் பிரிவு இன்று (20) வாக்குமூலம் பெற்றிருந்தது.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெறுமாறு, கொழும்பு குற்றப் பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நந்தனவின் ஆலோசனைக்கு அமைய, அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவின் வழி நடத்தலில், 4 ஆம் இலக்க விசாரணை அறையில் அதன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரால் இவ்விசாரணைகள் நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஏற்கனவே சி.சி.டி.யினர் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கு வழங்கியிருந்த அறிவித்தல் பிரகாரம் அவர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தெமட்டகொடையில் உள்ள சி.சி.டி. அலுவலகத்தில் ஆஜரானார். அதனையடுத்து அவரிடம் மாலை 5.30 மணி வரை விசாரணை மற்றும் வாக்கு மூலம் பெறும் பணிகள் இடம்பெற்றதாக சி.சி.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதற்கமைய, நேற்று (19) பிற்பகல் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், கொழும்பு குற்றப் பிரிவினர் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்திருந்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் பிலபிட்டி மற்றும் தம்மிக ஹேமபால ஆகிய நீதிபதிகள் மூவரிடம் உடனடியாக வாக்குமூலம் பெறுமாறு கடந்த வியாழக்கிழமை (16) ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment