அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் - அலைனா டெப்லிட்ஸ்

அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரியிருந்தது. அத்தகைய கோரிக்கையை தமிழ் மக்கள் அங்கீகரித்திருந்தமையை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியிருந்தன

மேலும் தேசிய பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திய இரா சம்பந்தன் , மக்கள் சுய மரியாதையுடனும் தன்மானத்துடனும் தமது நாளாந்த பிரச்சினைகள் தொடர்பில் தாமே முடிவெடுக்க கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை அரசியல் யாப்பொன்றின் மூலாமாக அடைவதே எமது நோக்கமாகும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மட்டுமல்லாது அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வினை அடையும் முகமாக அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தெரிவித்த இரா சம்பந்தன் எச்சந்தர்ப்பத்திலும் எமது மக்களின் அபிலாசைகளையோ உரிமைகளையோ நாம் விட்டுக்கொடுக்கவோ அவற்றிக்கு மாறாகவோ செயற்பட மாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும் இனங்களிற்கிடையே சமாதானமும் நாட்டிலே இஸ்திரத்தன்மையும் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்து கொள்வது மிக கடினமாகும் எனவும் வலியுறுத்தினார்.
19வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் ஜனநாயக பண்புகளிற்கு விரோதமான எந்தவொரு திருத்தங்களிற்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழிப்பதற்கு தாம் சார்பாக செயற்பட முடியாதென்பதனையும் வலியுறுத்தி கூறினார்.

இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேறிய மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கை அரசாங்கம் உள்நாட்டிலே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியாமையே இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டமைக்கான முக்கிய காரணமாகும் என தெரிவித்த அதேவேளை, இலங்கை அரசாங்கமானது பல்வேறு விடயங்கள் தொடர்ப்பில் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது, இந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதானது, இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராக இல்லை என்பதனையே எடுத்துக்காட்டும் என்பதனை வலியுறுத்தினார்.

அதுமாத்திரமல்லாது இந்த வாக்குறுதிகளில் பின்வாங்குகின்றமையானது இலங்கை அரசாங்கம் சர்வதேச பிரகடணங்களை தன்னிச்சையாக மீறி செயற்படுகின்ற ஒரு அரசாங்கமாக கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான தொடர்பாடலை தமது அரசாங்கம் கொண்டிருக்கும் என்பதனை மீளுறுதி செய்த அமெரிக்க தூதுவர் அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment