மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருவதாக மேல் மாகாண மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதியாக அர்ஜுன மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார்.
அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலிந்த ரணசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கோரிக்கை தொடர்பில் சிங்கப்பூர் சட்ட மா அதிபர் திணைக்களம் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் பரிசீலனை செய்ததன் பின்னர் நாடு கடத்துவதற்கான உத்தரவை தகுந்த நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் இன்று முறிகள் மோசடி தொடர்பான வழக்கை விசாரணை செய்திருந்தது.
இதேவேளை, வழக்கின் 10 ஆவது பிரதிவாதியான அஜஹான் கார்திய புஞ்சிஹேவாவை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மீண்டும் அறிவித்தலை பிறப்பிப்பதற்கு நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முறிகள் மோசடி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆறாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸுக்கு சிகிச்சைகளுக்காக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த பிரதிவாதியின் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் குழாம், அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment