அரசாங்கத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டு நிறைவில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால், ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வாக்காளர் இடாப்பு திருத்தச்சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இத்தகவல்களை ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையத்தில் இன்று புதன்கிழமை கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. ஆணைக்குழுத் தலைவருடன் ஆணைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் செயலக உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு விளக்கமளித்த ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியதாவது எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியுடன் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் நாலரை வருடங்கள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதன்படி உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படுமானால், ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த தயாராக இருக்கின்றோம். அதன் பிரகாரம் ஏப்ரல் 25 ஆம் திகதியோ அல்லது 27ஆம் திகதியோ 28ஆம் திகதியோ தேர்தல் நடத்தப்படும்.
அதற்குப் பின்னரான காலப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் மே மாதம் 2 இல் அல்லது 9 இஇல் இன்றேல் 16ஆம் திகதி தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
இந்தத் தேர்தலை 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புக்கமையவே நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
தேர்தல் விதிகளில் காணப்படும் குறைபாடுகளால் விதிகளை சீராக கையாள முடியாதுள்ளது. இச்சட்டத்தை முழுமைப்படுத்தி அதிகாரபூர்வ மிக்கதாக பலப்படுத்த வேண்டியுள்ளது. அதற்குப் பொருத்தமான ஆலோசனைகளை அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன். நாம் இணைந்து எடுக்கும் ஒரு காலப்பகுதிக்குள் இந்த யோசனைகளைப் பெற்றுத்தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது இவ்விதமிருக்க தேர்தல் காலத்தில் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போதைய சட்டம் வலுவானதாகக் காணப்படாததால், அது குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டி பொருத்தமான ஆலோசனைகளைப் பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment