டிக்கோயா, போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு ஒரு வருட காலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் எவ்வித கட்சி பேதங்களும் இன்றி வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளபட்டு, அவர்களுக்கு வெகுவிரைவில் கையளிக்கபடுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
டிக்கோயா, போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதிக்கு நேற்று (02) சென்ற அமைச்சர், அந்த மக்களோடு கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் உட்பட ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களும் குறித்த தோட்ட பகுதிக்கு சமுகமளித்திருந்தனர்.
தாம் பொறுப்பேற்றுள்ள அமைச்சின் ஊடாக மேற்கொள்ளபடவிருக்கின்ற வீடமைப்பு திட்டம் தொடர்பிலும் மக்களுக்கு அமைச்சர் தெளிவுபடுத்தியதோடு, போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்ள முதற்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 வாரங்களில் தேசிய கட்டிட ஆய்வாளர்களின் அறிக்கை தமக்கு கிடைக்கபெற்ற உடன் வீடமைப்பு திட்டத்திற்கான அடிகல் நாட்டப்படும். தீ விபத்தில் பாதிக்கபட்ட அனைவருக்கும் வீடுகள் உள்ளது. ஆகவே, எவரும் இது குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளர் கடன் பெற்றுள்ளதாக கூறி, அவர்களுடைய சம்பளத்தில் ஒரு தொகையினை தோட்ட நிர்வாகம் அறவிட்டு வருகின்றமை தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தொழிலாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கு அமைய குறித்த நிர்வாகத்தின் கீழ் பணி புரியும் சமூகநல உத்தியோகத்தருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்குமாறும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மனிதவள பெருந்தோட்ட நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment