உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலமளித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித் - News View

About Us

About Us

Breaking

Friday, December 6, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலமளித்தார் பேராயர் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வருகை தந்தார்.

ஆணைக்குழுவில் சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, இன்று (06) பிற்பகல் 2.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாரத்த மண்டப கட்டடத்தில் (BMICH) உள்ள முதல் தளத்தில் அமைந்துள்ள ஆணைக்குழு அலுவலகத்தில் அவர் வாக்குமூலம் வழங்கினார்.

தாக்குதலை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தலைமையில் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், சட்ட ஒழுங்கு அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அமைய, தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தீவிரவாதியான ஷஹ்ரான ஹசீம் தலைமையில் நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள 3 தேவாலயங்கள், ஷங்ரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய 3 சொகுசு ஹோட்டல்கள், தெமட்டகொடவிலுள்ள வீடு மற்றும் தெஹிவளையிலுள்ள ட்ரொபிகல் இன் எனும் சிறு விடுதியொன்றிலும் இடம்பெற்றது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் பெயரில் இயங்கிய அமைப்பின் தலைவனான ஷஹ்ரான ஹசீம் தலைமையில் 7 தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள், 3 பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 259 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 500 பேர் காயமடைந்திருந்தனர்.

No comments:

Post a Comment