அண்மையில் பெய்த கன மழை காரணமாக குருநாகல் மாநகர சபைக்கு உட்பட்ட வில்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள 101 லயன் குடியிருப்புத் தொகுதி நீரில் மூழ்கியது.
நகர சபையில் சேவை புரியும் தொழிலாளர் குடியிருக்கும் குறித்த பிரதேசத்தை வடமேல் மாகாண ஆளுநர் எம்.ஜே.எம். முஸம்மில் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்ட நகர அபிவிருத்தி சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வந்த வீடமைப்புத் திட்டம், நல்லாட்சி அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டது. அதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறிந்து மீண்டும் அவ்வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேவேளை இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான நடடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விஜயத்தின் போது குருநாகல் நகர முதல்வர் துசார சஞ்ஜீவ விதாரண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment