சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது ராஜபக்ச அரசு! - ரணில் குழு மாதிரி நாம் இல்லை என்கிறார் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2019

சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது ராஜபக்ச அரசு! - ரணில் குழு மாதிரி நாம் இல்லை என்கிறார் தினேஷ்

வெளிநாடுகளினதோ அல்லது சர்வதேச அமைப்புகளினதோ அழுத்தங்களுக்கும் மிரட்டல்களுக்கும் ராஜபக்ச அரசு ஒருபோதும் அடிபணியாது.”

இவ்வாறு வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “ரணில் குழு மாதிரி ராஜபக்ச அணி இல்லை. சர்தேச சமூகம் சொல்லுவதற்கெல்லாம் நாம் தலையாட்ட முடியாது. சர்வதேச சமூகத்தின் பரிந்துரைகள் நாட்டின் நலனுக்குப் பாதிப்பு இல்லாமல் இருந்தால் நாம் அதனை ஏற்போம். ஆனால், அழுத்தங்கள் கொடுத்தோ அல்லது மிரட்டல்கள் விடுத்தோ சர்வதேச சமூகம் எம் மீது பரிந்துரைகளைத் திணித்தால் நாம் அதனை ஏற்கவேமாட்டோம்.

எமது நாட்டின் இறைமை மீது வெளியாட்கள் தலையிட முடியாது. நாட்டின் இறைமைக்குப் பாதகம் இல்லாத வகையில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உண்டு.

இலங்கையில் ஆயுதப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. எனவே, இங்குள்ள சகல இன மக்களும் புதிய வழியில் - ஓரணியில் பயணிக்கவே விரும்புகின்றார்கள். அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசு செய்யும். அதைவிடுத்து எமது நாட்டின் இறைமை மீது தலையிட வெளிநாடுகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ எந்த அருகதையும் இல்லை.

சர்வதேச சமூகத்தைப் பகைப்பது எமது நோக்கமல்ல. ஆனால், அந்த நிலைமைக்கு சர்வதேச சமூகம் எம்மைத் தள்ளிவிடக்கூடாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment