இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் நாளையும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதுடன், 14 மாவட்டங்களுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
நாடு முழுவது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 4546 குடும்பங்களைச் சேர்ந்த 15568 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், மழையுடனான வானிலையால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதுடன், பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பிரகாரம் முப்படையினரும், பொலிஸாரும் பொது மக்களுக்கான நலன்புரி விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஐந்து தினங்களாக நாட்டில் தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதனால் நாட்டின் தென் மாவட்டங்களில் சில பிரதேசங்களிலும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.
இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் 1773 குடும்பங்களைச் சேர்ந்த 6220 பேரும், வடமாகாணத்தில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 955 பேரும், சம்பிரகமுவ மாகாணத்தில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும், மத்திய மாகாணத்தில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 792 பேரும், வடமேல் மாகாணத்தில் 1764 குடும்பங்களைச் சேர்ந்த 5843 பேரும், வட மத்திய மாகாணத்தில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேரும், ஊவா மாகாணத்தில் 321 குடும்பங்களைச் சேர்ந்த 1164 பேரும், தென் மாகாணத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 112 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சீரற்ற காலநிலையின் காரணாக 11 மாவட்டங்களில் வாழும் மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 1000 இற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு நீடிக்குமென தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அறிவித்துள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment