எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெரும் அனுபவத்தைக் கொண்ட அரசியல்வாதி - கோட்டாபய ராஜபக்ஷ எவ்வித அனுபவமும் இல்லாதவர், நாட்டை சிரழித்துவிடுவார் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெரும் அனுபவத்தைக் கொண்ட அரசியல்வாதி - கோட்டாபய ராஜபக்ஷ எவ்வித அனுபவமும் இல்லாதவர், நாட்டை சிரழித்துவிடுவார்

எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெரும் அனுபவத்தைக் கொண்ட அரசியல்வாதி. பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய இவர் மக்களின் தேவைகளை அறிந்தவர். கோட்டாபய ராஜபக்ஷ எவ்வித அனுபவம் இல்லாதவர். இவரிடம் இந்நாட்டை ஆட்சிபுரிய கொடுத்தால் நாட்டை சிரழித்துவிடுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

சஜித் பிரேமதாச இந்நாட்டின் அனைத்து பகுதி மக்களின் தேவைகளையும் அறிந்தவர். அவரிடம் மக்கள் மனதை வெற்றி கொள்ளும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அவர் திட்டமிடல் செயல்பாட்டில் வல்லவர். திறமைசாலியாவார். 

வடகொழும்பு தேர்தல் தொகுதியின் பாலத்துறை சந்தியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசுகையில் அவர், எமது வேட்பாளருக்கு மக்களின் ஆதரவு பெருகிவருகிறது. மினுவாங்கொடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் அவர்களின் ஆதரவாளர்களுடன் எம்முடன் இணைந்தனர். இவ்வாறு மக்கள் புது யுகத்தை நோக்கி எம்முடன் சங்கமமாகிறார்கள். 

ஆகையால் கோட்டாபய ராஜபக்ஷ என்ன இத்தேர்தலில் சாதிக்கப் போகிறார். சஜித் பிரேமதாசவுக்கு ஏழை மக்களின் துயரம் தெரியும். அதன் எதிரொலியாகவே மத்திய கொழும்பை கைவிட்டு அம்பாந்தோட்டையில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 

கோட்டாபய எந்நேரமும், எங்கும், எவரிடமும் இந்நாட்டின் பாதுகாப்பு பற்றியே கருத்துத் தெரிவிக்கிறார். எவரின் கேள்விக்கும் நாட்டின் பாதுகாப்பையே முன்னிலைப்படுத்துகிறார். இந்நாட்டின் முப்படைக்கும், பொலிஸ் பிரிவுக்கும் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலத்தில் என்ன செயல்களை முன்நிலைப்படுத்தினார்.

இராணுவத்தினரை வீதிகளை சுத்தம் செய்யும், புல் வெட்டவும், குப்பைகளை அகற்றவும் பயன்படுத்தினார். 2015 இக்குப் பின்னர் இராணுவம் தனது கடமைகளில் மட்டுமே செயலாற்றி வருகின்றனர். எமது இராணுவம் அமெரிக்கா செல்ல இயலாத கட்டத்தில் எமது ஆட்சியிலேயே ஐ.நா. சபையின் சமாதான படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 

அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளில் பயிற்சியை மேற்கொண்டனர். ஐ.எஸ். தீவிரவாதத்தை எமது நாட்டில் அழித்தனர். இன்று நாட்டின் பாதுகாப்பு கடமையில் மாத்திரமே படையினர் தங்களது கடமைகளை மேற்கொள்கின்றனர். 

இன்று ஐ.எஸ். பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு சிறப்புடன் உள்ளது. வெள்ளை வேன் கலாசாரம் இன்றில்லை. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை பற்றிய தனது கருத்தையும், அவ்வமைப்பை இல்லாமல் செய்ய இயலுமா என்பதை கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

ஐ.எஸ் தலைவர் அல்பாக்தாதி கொல்லப்பட்டார். பல நாடுகள் இணைந்தே அம்முயற்சியில் இறங்கின என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவின் இம்முயற்சியை ரஷ்யா, சிரியா, துருக்கி, ஈராக் ஆகிய நாடுகள் முன்னெடுத்தன. 

புதிய யுகத்தை நோக்கி பயணிப்போம். இவ்வுயகம் நவம்பர் 16 இல் உதயமாகிறது. எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர் வடகொழும்பில் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியானது. அவ்வெற்றிக்காக அனைவரும் உழைப்போம். என்றார். 

வடகொழும்பு நிருபர்

No comments:

Post a Comment