அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் முதல் 6 இடங்களை பிடித்த நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்கொட்லாந்து, ஓமான் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றன.
7 ஆவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
இதன்படி ‘ஏ’ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒக்டோபர் 18 ஆம் திகதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர்-12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நடப்பு சம்பியன் மேற்கிந்தியதீவு மற்றும் இரு லீக் சுற்று அணிகள், மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.
முன்னாள் சம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆபிரிக்காவை ஒக்டோபர் 24 ஆம் திகதி பேர்த்தில் சந்திக்கிறது. அதே நாளில் சிட்னியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
சூப்பர்-12 சுற்றில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகும். இறுதிப்போட்டி 2020 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி மெல்பேர்னில் இடம்பெறும்.
No comments:
Post a Comment