ஐந்து வருடங்களில் உலகில் வலுவான பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கையை மாற்றுவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
எம்பிலிபிட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 2015ல் நடந்த தேர்தலில் அப்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்ய வேண்டுமென 62 இலட்சம் மக்கள் முடிவு செய்தார்கள். அந்த ஆட்சியை தோற்கடித்த புதிய அரசாங்கம் நாட்டு மக்களை கடன் சுமையிலிருந்து மீட்கும் என எண்ணினார்கள்.
ஊழல் மோசடியை ஒழிக்கும் என நம்பினார்கள். நாட்டின் சொத்துகளை கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்கும் என எதிர்பார்த்தார்கள். இந்நாட்டு மக்களின் விவசாயம் உள்ளிட்ட கிராமிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என எண்ணினார்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்குமென நம்பினார்கள். ஆனால் என்ன நடந்தது. ஐந்து வருடங்களில் அவர்கள் கூறியதற்கு எதிராகதான் ஆட்சி நடத்தினார்கள்.
மக்கள் மாறினால் புதிய ஆட்சியொன்றை எம்மால் அமைக்க முடியும். நாம் அனைவரும் வலுவாக தைரியத்துடன் முன்வந்தால் நவம்பர் 16ஆம் திகதி புதிய ஆட்சியொன்று உருவாவது நிச்சயம் எம்முடிவு மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
நாம் ரணிலிடம் உள்ள அதிகாரத்தையோ மகிந்தவிடம் உள்ள அதிகாரத்தையோ பெற முயற்சிக்கவில்லை. மக்களின் பலத்தை உறுதியான ஆட்சியொன்றை அமைப்பதற்காக பாவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவே நாம் இங்கு வந்தோம்.
ஏழ்மையின் அதளபாதாளத்துக்கு சென்றுள்ள இந்நாட்டை பணக்கார நாடாக மாற்றுவோம் என உறுதி அளிக்கின்றோம். ஐந்து வருடங்களில் உலகில் மிக சக்தி வாய்ந்த பொருளாதாரமுள்ள, பணக்கார நாட்டை நாம் உருவாக்குவோம்.
குடிமக்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வது எவ்வாறு? பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவது எவ்வாறு? வீடொன்றை அமைப்பது எவ்வாறு? மருந்து வாங்குவது எவ்வாறு பயணம் செல்ல போக்குவரத்து வசதிகள் உண்டா இல்லையா என சிந்திக்காத, அனைத்து வசதிகளுடனும் கூடிய வசதியான வாழ்க்கையை எமது நாட்டு மக்களுக்கு நாம் பெற்றுகொடுப்போம். நாட்டையும் மக்களையும் நாம் வறுமையிலிருந்து மீட்போம் என்றார்.
No comments:
Post a Comment