தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு பின்னால் சென்றால் புதைகுழிக்கே செல்லவேண்டி ஏற்படும் - தமிழ் மக்களின் இருப்பு, பாதுகாப்புக்கு கோட்டாபயவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு பின்னால் சென்றால் புதைகுழிக்கே செல்லவேண்டி ஏற்படும் - தமிழ் மக்களின் இருப்பு, பாதுகாப்புக்கு கோட்டாபயவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது. தமிழ் மக்கள் இனியும் கூட்டமைப்பிற்கு பின்னால் சென்றால் புதைகுழிக்கே செல்லவேண்டி ஏற்படும் என கிழக்கு தேசம் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் மகேந்திரன் புவிதரன் தெரிவித்தார்.

பெரியநீலாவணையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கிழக்கு தேச விடுதலை முன்னணியின் பிரதித் தலைவர் ம.பிரியராஜ், ஊடகப் பேச்சாளர் ர.பவிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு தேச விடுதலை முன்னணியின் தலைவர், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு கோட்டாபயவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலே கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கிழக்கில் தமிழ் மக்கள் எந்தவொரு அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

ரணில் விக்கிரம சிங்கவின் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. 

ஆனால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்களது வசதிகளை பெருக்கி கொண்டார்கள். தங்களது பிள்ளைகளதும் உறவினர்களினதும் சுகபோக வாழ்க்கையை பெருக்கிக் கொண்டார்கள்.

ரணில் அரசாங்கத்தில் பின்கதவால் சென்று சலுகைகளைப் பெற்றுக் கொண்டு. முன் கதவால் வந்து தமிழ் மக்களிடம் வீரவசனங்களைப் பேசுகின்றனர். 

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதைகளுக்குப் பின்னால் தொடர்ந்து சென்றால் அவர்கள் தமிழர்களை புதைகுழிக்குள் தள்ளிவிடுவார்கள். 

சில விடயங்கள் கிடைக்காது என்று தெரிந்தும் சர்வதேசம் பெற்றுத்தரும் என்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர். முள்ளிவாய்க்காலில் வந்து காப்பாற்றாத சர்வதேசமா தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரப் போகின்றது. 

கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது. இந் நிலையில் தமிழ்த் தேசியம் என்னும் பூச்சாண்டியை நம்பி எமது சந்ததியினரின் எதிர்கால வாழ்வை அழிக்க முடியாது. தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு, அபிவிருத்தியே இன்றைய தேவையாகவுள்ளது.

சிறந்த ஆளுமையுள்ளவர் கோட்டாபயவை கிழக்கு தமிழர்கள் அமோக வெற்றி பெறச் செய்வதின் மூலம் எமது அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். 

அம்பாறை மாவட்டத்திலுள்ள 54 தமிழ்க் கிராமங்களும் அபிவிருத்தியின்றி கவனிப்பாரற்ற நிலையிலுள்ளது.

இக்கிராமங்களில் வாழும் இளைஞர், யுவதிகள் படித்த படிப்பிற்கு வேலைவாய்ப்பு இன்றி மாற்று சமூகத்திடம் கையேந்தி அடிமைத் தொழில் செய்கின்றனர். இந்நிலையை தோற்றுவித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகும் என்றார். 

பாண்டிருப்பு நிருபர்

No comments:

Post a Comment