இலங்கையின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் அதேநேரம் உள்நாட்டுப் பிரச்சினைகளில் சர்வதேச நாடுகள் தலையிடாத வகையில் சர்வதேச உறவுகளை முன்னெடுத்துச் செல்வோமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பலம் பொருந்திய தேசங்களின் பங்காளி நாடு ஆகாமல் அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உறவாடுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றும் அவர் கூறினார்.
சர்வதேச உறவுகளுக்கான இராஜாங்க அமைச்சராக நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றுகையில், இப் பதவி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் அல்ல. இது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான மிகப் பாரிய பொறுப்பு. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து செயற்பட நான் தயாராகவுள்ளேன்.
இது நாட்டுக்கும் புதிய ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் மிகவும் சவால் மிகக்கதொரு தருணம் என்பதால் நாம் அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
நாம் அனைத்து நாடுகளுடனும் நட்புடன் செயலாற்றி வருகின்றோம். இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க பாதுகாப்பு அமைச்சரென்ற வகையில் இந்தியாவுடன் சுமுகமான முறையில் நாடற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.
எமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வெளிநாட்டு உறவுகளை பலப்படுத்துவது, நட்பு நாடுகளுடன் ஒற்றுமையாக செயலாற்றுவது, சர்வதேச வர்த்தகத்தை முன்னேற்றுவது போன்ற எமது அரசாங்கத்தின் கொள்கைகளை எனது அமைச்சுக்கூடாக நான் முன்னெடுப்பேன்.
ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை எமது நாட்டுக்கு பெரும் பிரச்சினையாகியுள்ளது. எனினும் இதனை காரணமாகக் கொண்டு வெளிநாடுகள் எமது உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முன்வருகின்றனர். நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment