முஷ்பீகுர் ரஹீமின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ரி-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இதன் மூலம் பங்களாதேஷ் அணி ரி-20 சர்வதேச போட்டியில் முதல் முறை இந்தியாவை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 8 ரி-20 போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி, அருன் ஜெட்லி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில் பங்களாதேஷ் அணி அதன் தலைவர் ஷகிப் அல்-ஹசன் மற்றும் தமிம் இக்பால் இன்றியே களமிறங்கியது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணி அடிக்கடி விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்டங்களை சேகரிப்பதில் தடுமாற்றம் கண்டது.
அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையில் மறுமுனையில் துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிகர் தவான் சற்று நிதானமாக 42 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றதே அந்த அணிக்காக பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. இதன்போது பங்களாதேஷ் அணி எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. எனினும் அமினுல் இஸ்லாம் மற்றும் ஷபியுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்துவதற்கு தீபக் சஹாரினால் முடிந்தது. எனினும் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடி பங்களாதேஷ் அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக முஷ்பீகுர் ரஹீம் இந்திய அணியின் எதிர்பார்ப்பை முழுமையாக சிதறடித்தார். 43 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது முஷ்பிகுர் உடன் 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்ட சௌம்யா சார்கர் 35 பந்துகளில் 39 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில் பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட ரி-20 தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ரி-20 போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (07) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment