சட்டம் எதைச் சொல்கின்றதோ அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவோம் - டிஜிட்டல் விளம்பரப் பலகை, திரையரங்க விளம்பரம் என்பன தடை செய்யப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

சட்டம் எதைச் சொல்கின்றதோ அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவோம் - டிஜிட்டல் விளம்பரப் பலகை, திரையரங்க விளம்பரம் என்பன தடை செய்யப்பட்டுள்ளன

ஜனாதிபதி தேர்தலில் சட்டவிதிகளை மீறி பிரசார விளம்பரங்களை வெளிப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தத் தேர்தலின்போது சட்டவிதிகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து நேற்று தேர்தல் செயலகத்தில் ஊடக மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதலாவது ஊடக சந்திப்பை நடத்திய ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாவது, 

தேர்தல் காலப் பகுதியில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும் சட்டம் எதைச் சொல்கின்றதோ அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பிலும், கட்சிகளைப் பிரபலப்படுத்தும் விதத்திலும் வீதிகளின் இருமங்குகளிலும் டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் மற்றும் சினிமாப் படத்திரையரங்குகளில் விளம்பரக் காட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

தேர்தல் சட்டவிதிகளின் படி டிஜிட்டல் விளம்பரப் பலகை, திரையரங்க விளம்பரம் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அறிவித்தலின் பின்பும் அதுபோன்ற செயற்பாடுகள் தொடருமானால் அவற்றோடு தொடர்புபட்டவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லையை எதிர்வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடித்திருப்பதாகவும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார். விண்ணப்பிக்கும் கால எல்லை செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் கடும் மழை, ரயில்வே வேலை நிறுத்தம், ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரசு ஊழியர்கள் தபால் மூல வாக்களிக்க விண்ணப்பிக்க முடியாது போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு விண்ணப்பிக்கும் கால எல்லையை எதிர்வரும் 4ம் திகதி நள்ளிரலவு வரை நீடித்துள்ளோம். இறுதி நேரம் வரை காத்திராது உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

விண்ணப்பங்களை 3ம், 4ம் திகதிளில் தபாலிலிட வேண்டாம் அன்றைய தினங்களில் அருகில் உள்ள தேர்தல் அலுவலகங்களிலோ, தேர்தல் திணைக்களத்திலோ ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்வதாகவும் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment