ரணில் இருக்கும் வரை சஜித்தால் ஜனாதிபதியாக முடியாது - திஸ்ஸ அத்தநாயக்க எங்கு சென்றாலும் அந்தக் கட்சி வெற்றி பெறாது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2019

ரணில் இருக்கும் வரை சஜித்தால் ஜனாதிபதியாக முடியாது - திஸ்ஸ அத்தநாயக்க எங்கு சென்றாலும் அந்தக் கட்சி வெற்றி பெறாது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீடிக்கும் வரை, அமைச்சர் சஜித் பிரேமதாசவால் ஜனாதிபதி பதவியில் அமர முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார்.

அத்தோடு, தான் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அவர், இதனை முற்றாக நிராகரிப்பதாகவும் கூறினார்.

திருகோணமலையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வெல்வார் என்று எவரால் சான்றிதழ் வழங்க முடியும்? நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலேயே அவர்களின் பெறுபேறை மக்கள் கூறிவிட்டார்கள்.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்கும்வரை, இன்னொருவரை தனது கட்சியிலிருந்து அவர் ஜனாதிபதியாக்க மாட்டார்.

ரணில் விக்ரமசிங்க குறைந்தது, தனது கட்சியையேனும் முன்னேற்ற வேண்டும் என நினைப்பவராக இருந்தால், இவ்வளவு இழுபறிகளுக்கு மத்தியில் அவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கியிருக்க மாட்டார்.

பல வருடங்களாக எனக்குத் தெரிந்த ரணில் விக்ரமசிங்க, ஒருபோதும் சஜித் பிரேமதாச வெற்றியடைய இடமளிக்க மாட்டார் என்பது உறுதி. குறிப்பாக அவர் இருக்கும் காலம் வரை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால், இலங்கையின் ஜனாதிபதியாக முடியாது.

மேலும், திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். உண்மையில், அவர் அங்கு சென்றமையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் எங்கு சென்றாலும் அந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெறாது என்பதால் நாம் இது தொடர்பாக என்றும் கவலைப்பட்டது கிடையாது.

அத்தோடு, நான் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்வதாக தற்போது சில ஊடகங்களில் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறன. இதனையும் நான் முற்றாக நிராகரிக்கிறேன். நான் எக்காரணம் கொண்டும் அந்தக் கட்சியுடன் இனிமேல் இணைந்துகொள்ள மாட்டேன்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment