“ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி நடைபோடுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர். எனவே, குறுக்குவழியில் கோழைத்தனமாக அரசியல் நடத்துவதை விடுத்து ‘தில்’ இருந்தால் சஜித்துடன் ஜனநாயக வழியில் நேருக்கு நேர் மோதுமாறு அவர்களுக்கு சவால் விடுக்கின்றேன்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கொழும்பில் இன்று (03) காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் வந்துவிட்டால் போதும் மஹிந்தவுக்கும் அவரை சூழவுள்ளவர்களுக்கும் ‘இனவாத’ காய்ச்சல் ஏற்பட்டு விடுகின்றது. இதுவரை காலமும் இனவாதிகளுக்கு பாலூட்டி அவர்களை மறைமுகமாக இயக்கிய கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போது அந்த அணியில் இணைந்து அரசியலுக்கு வந்துள்ளார். இவர்களுக்கு மட்டுமே தேசப்பற்று இருப்பதாக எண்ணி சந்து, பொந்தெல்லாம் அது பற்றியே கூவித்திரிகின்றனர்.
மக்கள் மத்தியில் தற்போது நேர்வழியில் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு தமது ஆட்சியின் போது கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய ராஜபக்ஷக்களும், அவர்களின் சகாக்களும் வேறு வழியின்றியே வழமைபோல் இனவாத ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி கறைபடிந்த தமது கடந்த கால பயணத்தை மூடிமறைக்க முற்படுகின்றனர்.
சஜித் பிரேமதாசவுக்கும், எங்களுக்கும் ராஜபக்ஷக்களை விட நாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, செத்துமடிய போகும் தாய்நாடு மீது அதிக பற்று இருக்கின்றது. ஆனால், அரசியலுக்காக ஒரு போதும் தாய்நாடு மீதான பற்றை அடகு வைத்து வாக்கு வேட்டை நடத்தியது கிடையாது. உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை சந்தர்ப்பப்படுத்த முற்படுபவன் உண்மையான தேசப்பற்றாளன் கிடையாது என்பது தற்போது மக்களுக்கும் புரிந்துவிட்டது.
பழமையான விடயங்களில் நாட்டுக்கு தேவையானவற்றை பாதுகாத்து, அதேபோல் புதுமைகளுக்கு இடமளித்து புத்துணர்ச்சியுடன் புதுயுகம் நோக்கி பயணிப்பதே சஜித் பிரேமதாசவின் அரசியல் இலக்காக இருக்கின்றது. இது தொடர்பில் எமக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அன்று தொட்டு இன்றுவரை பிரதான கட்சிகள் நடத்திவரும் பாரம்பரிய அரசியலுக்கு அப்பால் நவயுகத்துடன் ஒப்பிட்டு சிந்தித்து முடிவெடுக்க கூடிய வல்லமை சஜித்துக்கு இருக்கின்றது. இதனால் தான் அவரின் கரங்களை பலப்படுத்த நாம் ஆதரவு வழங்கியுள்ளோம்.
எனவே, சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் அனைவரும் தீவிரமாக செயற்பட வேண்டியுள்ளது. அவரின் வெற்றியில் தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.
எனவே, மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் உண்மை எது, பிழை எது என்பதை பகுத்தறிந்து முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment