சிங்கள மக்களே இணைந்து வாருங்கள். எங்கள் நாட்டில் இருக்கின்ற ஒரு தேசிய இனத்தையும் அரவணைத்துச் செல்லுவோம் என்ற நம்பிக்கையை கொடுக்கின்ற ஜனாதிபதி வேட்பாளர் துணிந்து வெளிவரட்டும். அவருக்கு ஆதரவளிப்பது பற்றி நாங்கள் சிந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி விவேகானந்தாநகரில் நேற்று நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், எமது வாக்குகள் மிகவும் பெறுமதியானது. இந்த நாட்டில் அடிக்கடி ஏதோவொரு தேர்தல் நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளைத் தவிர்த்து இப்போது ஜனாதிபதித் தேர்தல் வந்திருக்கின்றது. நாங்கள் இப்போது ஒரு சரியான ஒரு தீர்வை அடைய முடியாமல் எங்களுக்கான சரியான பாதை அமைக்கப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பாக ஆலோசித்து வருகின்றது.
எமது கட்சியின் தலைவர், அறிவித்தது போன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் என்ன?.
கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிக்கொண்டிருக்கின்ற ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த வேட்பாளர் ஒரு தீர்க்கமான முடிவை வைக்கின்றாரோ, எவர் ஆணித்தரமான கருத்தை முன்வைக்கின்றாரோ அவர் தொடர்பில் நாங்கள் சரியான முடிவை எடுப்போம்.
950 நாட்களுக்கு மேலாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் வீதியில் போராடுகின்றார்கள். அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இன்னும் எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இந்த விடயங்களை மையமாக வைத்து இதற்கான தீர்வு என்ன என்பதை எங்களுக்காக எங்கள் மக்களுக்காக யார் தன்னுடைய கருத்தை பகிரங்கமாக முன்வைக்க துணிச்சல் மிக்க ஜனாதிபதி வேட்பாளர் யார்?
தமிழ் மக்களிற்கு ஒரு கதையினையும், சிங்கள மக்களிடத்தில் வேறு விதமான கதையும் கூறுபவர்களிற்கு ஆதரவு இல்லை. இரு இனத்தவரையும் இணைத்து செல்லக்கூடிய தைரியமாக வெளிப்படைத் தன்மையுடையவரிற்கே ஆதரவு என்றார்.
பரந்தன் நிருபர்
No comments:
Post a Comment