எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களிக்கவுள்ள உங்கள் அனைவரையும் இம்மடல் மூலம் சந்திப்பதில் பெருமிதம் அடைகின்றேன் என தேசியக் காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது எனது அரசியற் பயணத்தை அவதானித்துக் கொண்டும் புரிந்து கொண்டுமிருக்கும் நீங்கள் மீண்டுமொரு வரலாற்றுத் தேர்தலைச் சந்திக்கின்றீர்கள். விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் 30 ஆண்டுகள் துயர்மிகுந்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வாழ முடியாமல் அச்சத்தோடு காலம் கடத்திய பொழுதுகளை நம் தமிழ், முஸ்லிம் மக்கள் மறந்து விடமுடியாது.
இந்நிலையில்,முஸ்லிம் சமூகம், மாமனிதர் மர்ஹூம் அஷ்ரஃபினால் வழி நடாத்தப்பட்டு அப்பெருந்தலைவனையும் இழந்து பரிதவித்த வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் 'ரணிலையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் வெறுத்த பெருந்தலைவரின் கொள்கைக்கு மாற்றமாக இயங்கி, ஐக்கிய
தேசியக் கட்சியுடன் சங்கமமாகி சமூகமும் நாடும் பிழையாக வழி நடாத்தப்பட்ட வேளையில் நான் உட்படப் பலரும் கட்சியிலிருந்து பிரிந்து தேசியக் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியினை அமைத்து சமூகங்களின் விடுதலை மற்றும் ஒற்றுமைக்கான பயணத்தை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது.
இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும், வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.எல்லா இனமக்களும் தத்தமது உரிமைகளோடு சுதந்திரமாகவும் ஏனையவருடன் சகோதரத்துவமாகவும் வாழுகின்ற சூழலை உறுதிப்படுத்த வேண்டும்என்ற மூன்று கோரிக்கைகளையும் முன்வைத்து தேசிய காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தது. மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
அவரது முதலாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, நம் மக்கள் தொடர்பான கோரிக்கைகளில் ஒன்றான வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக நிர்வகிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. மேலும், மற்றொன்றான ஆயுதக் குழுக்கள் அழிக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமல்லாமல் முழு நாடும் நிம்மதியாக வாழும் சூழலும் ஏற்படுத்தப்பட்டது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டது. நாட்டு மக்கள் நன்றியோடு வாக்களிக்க ஆயத்தமானார்கள். இத்தருணத்தில், வழக்கம் போல் தமிழ், முஸ்லிம் தலைமைகள் அம்மக்களை எதிர்த்திசையிலேயே வழிநடாத்தி வரலாற்றுத் தவறைப் புரிந்தனர். ஆனாலும் 18 இலட்சம் வாக்குகளை மேலதிகமாகப் பெற்று மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். மீண்டுமொரு முறை குறிப்பாக முஸ்லிம் சமூகம் நன்றிகெட்ட சமூகமாகப் பார்க்கப்பட்டது.
ஆயினும் பேதங்களை மறந்து எல்லா சமூகங்களையும் ஒன்றாகப் பார்த்து பாரிய அபிவிருத்திகளை நாடு முழுவதும் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ நமது கடைசிக் கோரிக்கையான எல்லா சமூகங்களும் வாழ்வதற்கான சூழலை அமைத்துத் தருவதற்கான விடயங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இது இவ்வாறிருக்க, நமது நாட்டையும் வளங்களையும் குறிபார்த்துக் கொண்டிருக்கும் வெளிச்சக்திகள் தமது கனவுகளை நிறைவேறுவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டதும் சூழ்ச்சிக்காரர்களின் எண்ணம் நிறைவேறியது. மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.
குறிப்பாக வரலாற்றில் முஸ்லிம் சமூகமும் சூழ்ச்சிக்குள் மாட்டிக்கொண்டது.
நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அவ்வாட்சியினால் வேறொரு போதுமில்லாதவாறு அவசர அவசரமாக நமது அரசியல் அமைப்பு சாசனம் திட்டமிட்டிருந்தபடி சிதைக்கப்பட்டது. இதனால், நமது நாட்டின் பலமான இராஜ்ஜியத்தின் முதுகெலும்பு சிதைக்கப்பட்டு பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டது. தேவைகளுக்கேற்றவாறு நினைத்த நேரமெல்லாம் கலவரங்களை உருவாக்கி குளிர் காய்வதற்கு முஸ்லிம்கள் கறிவேப்பிலைகளாகப் பாவிக்கப்பட்டனர்.
அண்மைக்கால வரலாறுகளில் ஒரு போதுமில்லாதவாறு பெரியளவில் முஸ்லிம் மக்களின் உயிர், உடைமைகளும் மத வழிபாட்டுத் தலங்களும் பகிரங்கமாகப் பதம் பார்க்கப்பட்டன. இவைகளுக்குப் பின்னால் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசும் பாதுகாப்புத் திணைக்களங்களும் பின்னணியில் இயங்கியமை தொடர்பான தகவல்கள் நம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இவை அரசாங்கத்தின் வங்குரோத்துத் தனத்தைத் தெளிவாக்கின. அன்றியும் 2015 ஆம் ஆண்டில் அளுத்கம போன்ற கலவரங்கள் அரசியல் இலாபத்திற்காகவே தோற்றுவிக்கப்பட்டதும் நிரூபணமானது.
நின்றுவிடாது, நாட்டில் அதி உச்சமான இனவாதம் தோற்றுவிக்கப்படுவதற்காக குர்ஆனையும் இஸ்லாத்தையும் விளங்கிக் கொள்ள முடியாத அடிப்படைவாதம் பாய்ச்சப்பட்ட மௌலவி என்ற பெயருடையவரும் அவருடைய சஹாக்களும் மனிதாபிமானத்திற்கப்பால் ஈனச் செயல்களுக்குப் பாவிக்கப்பட்டனர். இதனால், சகோதர கிறிஸ்தவ ஆலயங்களில் கருணை இல்லாத படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. அதற்கு அரசும் பாதுகாப்புத் திணைக்களங்களும் துணைபோன அறிக்கைகள் பலவும் வெளிவந்திருக்கின்றன.
இந்நாட்டில் வாழையடி வாழையாக நாட்டுப்பற்றோடு வாழ்ந்த முஸ்லிம் சமூகம் பயங்கரவாதச் சமூகம் என்று முதல் முறையாக முத்திரையும் பதிக்கப்பட்டது. அரசியல் இலாபங்களைப் பெறுவதற்கு திட்டமிட்டிருந்தபடி முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா நாடகங்களை அரங்கேற்றியிருந்தாலும் அதனைத் தொடர்ந்த வரலாறுகளினால் முஸ்லிம் மக்கள் இவர்களுடைய உள்நோக்கங்களைப் புரிந்து கொண்டனர்.
மேலும், நாடு தொடர்பாகவோ, தம்மக்கள் தொடர்பாகவோ அன்றி தமது அபிலாஷைகள் பேரவாக்களை அடைந்து கொள்வதற்காக மாத்திரம் தொழிற்பட்டதனால் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு அவர்களுடைய ஏவலாளிகளாகவும் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல் தலைமைகளின் மர்மங்கள் வெளியாகின. அவற்றிலிருந்து விடுபட முஸ்லிம் சமூகத்தைக் கவசமாகப் பாவிக்கும் தந்திரோபாயமும் தெளிவாகியது. இவைகளுக்கப்பால் நமது நாட்டின் இறைமை மீறப்பட்டு, நமது வளங்களை அந்நியர்கள் கையகப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் வளங்கள் அந்நியர்களுக்கு விலைபேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாட்டின் இறைமைக்கு வேட்டுவைக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டியது இந்நாட்டில் வாழும் அனைத்துப் பிரஜைகளினதும் தலையாய கடமையாகும். இதற்குப் பொருத்தமான தலைமையும் அரசாங்கமும் உருவாக்கப்பட வேண்டும் என்று நம் மக்கள் இறுக்கமாக வேண்டி நிற்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியையும், சூழ்ந்திருக்கின்ற சூழ்ச்சிக்காரர்களையும் தோற்கடித்து நாட்டை மீட்பதானால் பிரிந்து கிடக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றாக்கப்பட்டு நாட்டுப்பற்றுள்ள ஏனைய கட்சிகளும் அவற்றோடு ஒன்றிணைவது காலத்தின் தேவையென தேசிய காங்கிரஸ் நல்லெண்ணத்தோடு வலியுறுத்தி வந்தது.
நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாட்டின் இறைமை, பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பில் நிறைந்த அனுபவம் கொண்டிருத்தல், எல்லா இன மக்களையும் முறையாக வாழ வைக்க வேண்டுமென்ற நாட்டு மக்களின் எண்ணக்கருக்களை நிறைவேற்றுதல் என்பவை தொடர்பாக மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக கோட்டாபய ராஜபக்ஷ, அனுபவமிக்க பெருந்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்மொழியப்பட்டு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அவர் பின்னால் நாட்டு மக்கள் சாரைசாரையாக அணிதிரண்டு கொண்டிருக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏனைய நாட்டுப்பற்றுள்ள கட்சிகளும் ஒன்றிணைந்துவிட்டன. நம் தேசத்தின் பாதுகாப்பு முதன்மையானது. அதன் மூலமே வாழும் சமூகங்களையும் பாதுகாக்க முடியும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
2005 ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய காங்கிரஸ் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியது. முன்னர் கூறிய அக்கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட அவ்விரண்டு கோரிக்கைகளையும் ஞாபகப்படுத்தி அப்போது முன்வைக்கப்பட்ட மூன்றாவது கோரிக்கையை மாத்திரம் முன்வைத்து அதனை நிறைவேற்ற வேண்டுமென்ற நிபந்தனையோடு தேசிய காங்கிரஸ் 2019 இற்கான ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவை ஆதரிக்க களமிறங்கியிருக்கிறது.
நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் தத்தமது உரிமைகளோடு சுதந்திரம், சகோதரத்துவம், சமாதானத்துடன் வாழக்கூடிய முறையான அரசியலமைப்பொன்றை இந்நாட்டு மக்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டுமென்பதே அக்கோரிக்கையாகும்.
கடந்த கால வரலாற்று அனுபவம் கொண்ட நாம் மீண்டும் சூழ்ச்சிக்காரர்களின் வலைகளுக்குள் சிக்க முடியாது. ஆகவே வருகின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் ஆதரவினை கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கி நாட்டை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பங்காளிகளாவோம்.
No comments:
Post a Comment