“சிறுபான்மையினரின் ஆதரவு தமக்கு தேவையில்லை என ஒருபக்கம் கூறிவிட்டு மறுபக்கம் அவர்களின் ஆதரவைக் கேட்டு வருகின்றனர். இந்த இரட்டைவேடம் குறித்து சிறுபான்மை மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமானதாகும் எனினும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கச் செய்வதை நோக்கமாக கொண்டே கோத்தபாய அணி செயற்பட்டு வருகிறது. இதற்கான வியூகங்களை வகுத்த அந்த அணியினர் காய்நகர்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு அம்சமாகவே மூன்றாம் தரப்பு பற்றிய சிந்தனையும் தலைதூக்கச் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட்.
இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸாவை களமிறக்கிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையே சாரும்.
இதற்கான பிரதான காரணமாக அமைந்தது சிறுபான்மை சமூகங்கள் இந்த நாட்டில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - அதற்கான நம்பிக்கையைத் தரக்கூடிய ஒருவர் ஐனாதிபதியாக வரவேண்டும் என்பதாகும்.
இன்றைய நிலையில் எமது நம்பிக்கைகளை வலுப்படுத்தும் வகைளில் சஜித் பிரே மதாஸாவின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன. வெற்றி அவரை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அதனை சூழ்ச்சிகள் மூலம் தோற்கடிக்கச் செய்யும் ஏற்பாடுகளையும் கோத்தாபாய குழுவினர் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பின்புலத்தில் சிறுபான்மை மக்களின் சக்திகளும் இணைந்துள்ளன என்பதுதான் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்த சக்திகளையெல்லாவற்றையும் புறம்தள்ளி எமது மக்கள் தமது ஜனநாயகக் கடமையை செய்வார்கள் என்பதில் எமக்கு திடமான நம்பிக்கை இருக்கிறது.
எனினும் இறுதி நேரங்களில் வாக்களிப்பதில் இடையூறுகளை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு நாம் செய்றபட வேண்டும் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளது.
No comments:
Post a Comment