பிரேமதாஸவுக்குப் பின்னர் ஐ.தே.க இழந்த ஜனாதிபதி பதவி மீண்டும் பெறப்படும் - தெற்காசியாவின் முதன்மை நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

பிரேமதாஸவுக்குப் பின்னர் ஐ.தே.க இழந்த ஜனாதிபதி பதவி மீண்டும் பெறப்படும் - தெற்காசியாவின் முதன்மை நாடாக இலங்கையை மாற்றியமைப்போம்

ரணசிங்க பிரேமதாஸாவுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஜனாதிபதி பதவி இடைநிறுத்தப்பட்டே வந்துள்ளதாகவும் அன்னார் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஜனாதிபதி பதவிக்கு அவரது புதல்வர் சஜித் பிரேமதாசவை தேர்ந்தெடுத்து இடைவெளியை நிரப்புவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரசிங்க அழைப்பு விடுத்தார்.

2025 வரை எமது ஆட்சிப் பயணம் தொடர்ந்தால் தெற்காசியாவின் முதன்மை நாடாக இலங்கையை மாற்றியமைக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய போதே பிரதமர் இதைத் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது நல்லாட்சி அரசாங்கம் என்ன செய்தது என்று பரவலாகவே கேள்வி எழுப்பப்படுகின்றது. நாம் அவர்களிடம் கேட்கக் கூடிய ஒரே பதில் கேள்வி நாம் என்ன செய்யவில்லை என்பதுதான். இந்த நாடு மிக மோசமானதொரு பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. 

கடன் சுமை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் காணப்பட்டது. முதலில் இந்தக் கடன் சுமையிலிருந்து மீள வேண்டியிருந்தது. அதற்கு ஏற்ற அணுகுமுறையை நாம் மிகவும் நிதானமாக சிந்தித்து முன்னெடுத்தோம். இப்போதுதான் நாங்கள் சற்றுத் தலைதூக்க முடிந்துள்ளது. 

அதே சமயம் மக்களின் தேவைகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பதிலும் நாம் பின்நிற்கவில்லை. வீடுகள் வீதிகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் எனப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இடையிடையே பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், அவற்றை சமாளித்து எமது பணியை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளோம். நாடு முழுமையாக மீளக்கட்டியெழுப்புவதற்கு இன்னுமொரு 10 ஆண்டுகளாவது தேவைப்படுகின்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் எமது நாட்டை தெற்காசியாவின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு திட்டமிடப்படுள்ளது இளம் தலைமைத்துவங்கள் எமது கட்சிக்குள் உள்ளன. சஜித் பிரேமதாசவின் கரங்களைப் பலப்படுத்தி அவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு வழிவகுத்தால் எமது அடுத்தகட்ட நகர்வுக்கு அடியெடுதது வைக்க முடியும். 2015 இல் எதிர்கொண்ட சவால்கள் இப்போது இல்லை என்றார்.

(எம். ஏ. எம். நிலாம்)

No comments:

Post a Comment