உண்ணாவிரதம், வேலைநிறுத்தங்களை தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி - பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல தியாகங்களைச் செய்துள்ளார் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

உண்ணாவிரதம், வேலைநிறுத்தங்களை தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி - பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல தியாகங்களைச் செய்துள்ளார்

நாட்டில் கடந்த சில வாரங்களாக முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதம், வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் செயற்படுவோரை நாட்டு மக்கள் நன்கறிவரென, ஜனநாய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அலுவலகம் கொழும்பு வொக்ஷால் வீதியில் நேற்று முன்தினம் மாலை திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சர்கள் ரவி கருணா நாயக்க, நவீன் திஸாநாயக்க, சந்திராணி பண்டார, சரத் பொன்சேகா, மலிக் சமரவிக்கிரம, மனோ கணேசன் ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் அமைச்சர் நியுமால் பெரேரா உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாஸ கூறியதாவது அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடும் அரசியல் நோக்குடையோரே இந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னாலுள்ளனர்.

எனது தந்தையாரைப் போன்று கிராம மட்ட மக்களை அரவணைத்து அரசியல் செய்வதே எனது இலட்சியம். மக்களை அமைதியுடனும், சந்தோசமாகவும் வாழச் செய்யும் எமது திட்டத்துக்கு மக்களனைவரும் ஒன்றிணைய வேண்டும். எமது கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தியாகம், அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பற்றும் விதத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.

தலைமைத்துவம் என்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் பங்கமேற்படும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டேன். கட்சிக்குள் பல்வேறு கொள்கையுடையோர் உள்ளனர். பொதுவான ஒரே நோக்கத்துக்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். இதுதான் எமது கட்சியின் ஜனநாயகப் பண்பு, என்னை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்தவர்களுடன் நான், கைகோத்துள்ளேன்.

ஒற்றுமையே நமது பலம். அந்த ஒற்றுமைப்பலத்துடன் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றாகப் பயணித்து வெற்றி இலக்கை அடைவோம். தோல்வி மனப்பான்மையுடன் தாம் களமிறக்கவில்லை. நிச்சயமாக வெற்றியீட்டுவதே எமது இலட்சியமாகும்.

இந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டுமல்ல இதற்கு முன்னரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல தியாகங்களைச் செய்துள்ளார். இன்று செய்திருப்பதும் ஒரு தியாகம்தான். எமது கட்சி வீழ்ச்சியுற்ற சகல சந்தர்ப்பங்களிலும் கட்சியை தலை நிமிரவைத்த பெருமை அவருக்கே உண்டு. எதிர்காலத்தில் எமக்கான அரசாங்கத்தை, எமக்கான மாகாண சபைகளை வென்றெடுக்க வேண்டும். 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த நாட்டில் தனித்துவமான வரலாறு உண்டு. அதனை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். எனது வெற்றியை வெறுமனே இந்த சஜித்தின் வெற்றியாக நினைக்க வேண்டாம். இந்த நாட்டின், நாட்டு மக்களின் வெற்றியாக மாற வேண்டும். ஜனநாயகத்துக்கிடைக்கும் வெற்றியாக இது அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

எம்.ஏ.எம். நிலாம்

No comments:

Post a Comment