சரியான நேரத்தில் நல்ல காரியம் - டிரம்ப் பாராட்டிய விமான நிலைய பணியாளர் அப்படி என்ன செய்தார்? - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

சரியான நேரத்தில் நல்ல காரியம் - டிரம்ப் பாராட்டிய விமான நிலைய பணியாளர் அப்படி என்ன செய்தார்?

அமெரிக்காவின் சிகாகோ நகர விமான நிலையத்தில் ஏற்படவிருந்த பேராபத்தை உரிய நேரத்தில் சாதுர்யமாக தவிர்த்த பணியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஓஹரே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல விமான சேவைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில், அந்த விமான நிலையத்தின் டார்மாக் (நிறுத்துமிடம்) பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தின் அருகே குளிர்பானங்கள் கொண்டு செல்லும் ஒரு வாகனம் நின்று கொண்டிருந்தது. 

அந்த வாகனத்தின் டிரைவர் என்ஜினை இயங்கும் நிலையிலேயே விட்டுச்சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக டிரைவர் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் கொண்ட பெட்டி அவ்வாகனத்தின் ‘எஸ்லேட்டர்’ மீது விழுந்தது. இதை தொடர்ந்து வேகமாக ஒடத்தொடங்கிய அந்த வாகனம் தீபாவளி காலத்து சங்கு சக்கரம் போல் அங்கு நின்று கொண்டிருந்த விமானத்தின் அருகே வட்டமடிக்க தொடங்கியது.
இதை சற்றும் எதிர்பாராத விமான நிலைய பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது வேகமாக ஓடி வந்த ஒரு விமான நிலைய பணியாளர் தனது அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தை வேகமாக இயக்கி, தன்னிச்சையாக செயல்பட்டுக்கொண்டிருந்த குளிர்பானங்கள் நிரம்பிய வாகனத்தின் மீது வேகமாக மோதினார். 

இதனால் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி கொண்டிருந்த வாகனம் தலைகீழாக கவிழ்ந்து தனது இயக்கத்தை நிறுத்தியது. அவரது சமயோசித அறிவை விமான நிலைய பணியாளர்களும் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர். 

இந்த காட்சிகளை சற்று தொலைவில் விமானம் ஏறக்காத்திருந்த ஒரு பயணி தனது கைபேசியில் விடீயோவாக படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த விடீயோ செய்தி ஊடகங்கள் வாயிலாக வெகுவாக பரவியது. 

இச்சம்பவத்தை அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 'சரியான நேரத்தில் செய்யப்பட்ட நல்ல காரியம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஓஹரே விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment