ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நேற்றும் (01) ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது. இடம்பெற்ற சில சேவைகளில் பயணிகள் பெரும் அசௌகரியத்துடனும் அவலத்துடனும் பயணித்த அதேவேளை, சில இடங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதையும் காணக்கூடியதாகவிருந்தது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் கடந்த ஒரு வாரகாலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள போதிலும், நேற்று அமைச்சரவையில் இதுபற்றி ஆராய்ந்து துரித தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரயில் சேவையையும் ஆசிரியர் சேவையையும் ஒன்றிணைந்த சேவையாக மாற்றி, உகந்த சம்பள கட்டமைப்பொன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை உபகுழு முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ரயில் மற்றும் நிர்வாக சேவை, ஆசிரியர் சேவை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் ஆராய, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டன.
நிர்வாக சேவை அதிகாரிகள் அடங்கிய நிறைவேற்றுக் கொடுப்பனவினை சேவை மூப்பிற்கமைய 3 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்க எடுக்கப்பட்டிருந்த முடிவை மாற்ற உப குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்குப் பதிலாக சேவை மூப்பு பாராது சகலருக்கும் 15 ஆயிரம் ரூபா வழங்க வேண்டு மென்ற பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதேவேளை, பல்வேறு துறைகளினதும் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு முன்வைத்த அமைச்சரவைப் பத்திரங்களுக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதற்கிணங்க போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு வழமைக்குத் திரும்பும் என தாம் எதிர் பார்பபதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், தாம் எதிர்பார்த்த தீர்வை அமைச்சரவை பெற்றுக்கொடுக்கத் தவறி விட்டதாகவும் அதனையடுத்து தாம் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடரப் போவதாகவும் ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்யை தினம் அமைச்சரவையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தைக் கைவிட்டுக் கடமைக்குத் திரும்புவார்களென அரசு தரப்பில் நம்பிக்கை வெளியிட்டுவரும் நிலையில், தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென்று ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன.
இது தொடர்பில், தொழிற்சங்கங்களின் சார்பில் கருத்து வெளியிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் இந்திக்க தொடங்கொட கருத்து வெளியிடுகையில், தமது கோரிக்கைக்கு முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை என்பதால், தீர்வு கிட்டும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.
ரயில்வே தொழிற்சங்கங்கள் தமது சம்பளப் பிரச்சினையை முன்வைத்து நேற்று ஆறாவது நாளாகவும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது மக்கள் நேற்றுப் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்தது. வார நாட்கள் என்பதால் மக்கள் தமது கடமைகளுக்கு செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment