ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த குமாரசேகரவை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா பிரதிவாதிக்கு எதிராக இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரதிவாதியான கொழும்பு முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த குமாரசேகர இன்று மன்றில் ஆஜராகாமையால் இந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான கொழும்பு பிராந்தியத்திற்கான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையால் அவர் மன்றுக்கு ஆஜராகவில்லை என அறிவிக்கப்பட்டது.
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாஜூதீன் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment