ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (02) முற்பகல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினங்களிலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஸவிற்கு இரட்டைப் பிராஜாவுரிமையை வழங்கும் வகையில், 2005 ஆம் அண்டு நவம்பர் 21 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டுள்ள ஆவணம் சட்டபூர்வமற்றது அல்லது போலியானது எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பொன்று வழங்கப்படும் வரை, கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்ள முடியாதென இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ, பெற்றுக் கொண்டுள்ள இரட்டை பிரஜாவுரிமை சான்றிதழ் சட்டரீதியாக பூரணப்படுத்தப்படாத ஆவணம் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனுதார்கள் இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட பல சந்தர்ப்பங்களில் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கைகளின் பிரதிகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேகேசர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment