இலங்கை அணிக்கு எதிராக கராச்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-:0 என முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி நிர்ணயித்திருந்த 306 என்ற வெற்றியிலக்கினை நோக்கிய இலங்கை அணி ஷெஹான் ஜயசூரிய மற்றும் தசுன் ஷானக ஆகியோரின் போராட்டமான துடுப்பாட்டத்துடன் முன்னேறிய போதும், 46.5 ஓவர்களில் 238 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானிக்க, 10 வருடங்களுக்கு பின்னர் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச ஒருநாள் போட்டியொன்று ஆரம்பித்தது.
ஆரம்பத்திலிருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி சார்பில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினர். முதல் விக்கெட்டுக்காக 73 ஓட்டங்கள் பெறப்பட, இமாம் உல் ஹக் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்தும் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பக்கர் சமான் தனது அரைச் சதத்தை பூர்த்திசெய்து 54 ஓட்டங்களுடன், வனிந்து ஹசரங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில், முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க கைப்பற்றினார்.
இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், பாபர் அசாம் தனது 11 ஆவது ஒருநாள் சதத்தை கடந்தார். இதில், ஹரிஸ் சொஹைல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, பாபர் அசாம் இறுதிக்கட்டத்தில் 115 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
பாபர் அசாமின் ஆட்டமிழப்பை தொடர்ந்து வேகமாக ஓட்டங்களை குவித்த இப்திகார் அஹமட் 20 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பாகிஸ்தான் அணி 305 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் பகிர்ந்தனர்.
பின்னர் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, ஒரு கட்டத்தில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், தசுன் ஷானக மற்றும் ஷெஹான் ஜயசூரியவின் போராட்டத்தினால் இலங்கை அணி மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கையை அடைந்தும் (238) போட்டியில் தோல்வியை சந்தித்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க 14 ஓட்டங்களுடனும், சதீர சமரவிக்ரம 6 ஓட்டங்களுடனும் வெளியேற, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் அணித் தலைவர் லஹிரு திரிமான்ன ஆகியோர் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ச்சியாக ஓஷத பெர்னாண்டோ ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக இலங்கை அணி 22 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தங்களுடைய மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தசுன் ஷானக மற்றும் ஷெஹான் ஜயசூரிய அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவரும் இக்கட்டான நிலையில் இருந்து இலங்கை அணியை மீட்டு, மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் அரைச் சதம் கடந்ததுடன், 150 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்தையும் கடந்தனர்.
துரதிஷ்டவசமாக 96 ஓட்டங்களுடன் ஷெஹான் ஜயசூரிய ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் தசுன் ஷானக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டுக்காக 177 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று, சில சாதனைகளையும் தம்வசப்படுத்தினர்.
குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 6ஆவது விக்கெட்டுக்காக அதிகூடிய இணைப்பாட்டம், கராச்சி மைதானத்தில் 6ஆவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 6ஆவது விக்கெட்டுக்காக இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டம் போன்ற சாதனைகளை புதுப்பித்தனர்.
இலங்கை அணியின் சாமர சில்வா மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 159 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்தனர். குறித்த இணைப்பாட்டச் சாதனை இன்றைய தினம் ஷானக மற்றும் ஷெஹான் ஜயசூரியவால் தகர்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஷானக மற்றும் ஷெஹானின் சிறந்த இணைப்பாட்டத்தின் பின்னர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்த இலங்கை அணி 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. வனிந்து ஹசரங்க 30 ஓட்டங்களைப் பெற, பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் ஷின்வாரி 5 விக்கெட்டுகளையும், சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று 2ஆம் திகதி இதே மைதானத்தில் (கராச்சி) நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment