சட்டவிரோதமான முறையில் சங்குகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து 884 சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தலைமன்னார் மற்றும் கற்பிட்டி பகுதிகளிலேயே இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்தி கடற்படை கட்டளைப் பிரிவினரால் தலைமன்னார், ஊருமலை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவ்வாகனத்தில் சங்குகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 226 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
மன்னார், பேசாலையை சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சங்குகள் ஊருமலை பிரதேசத்திலிருந்து பேசாலைக்கு கொண்டுசென்று கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. 
இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள கெப் வாகனம் மற்றும் சங்குகளுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். 
இதேவேளை, கற்பிட்டி, சின்னக்குடியிருப்பு பிரதேசத்தில் வடமேல் கடற்படை கட்டளைப் பிரிவினரும் சின்னக்குடியிருப்பு பொலிஸாரும் இணைந்து நேற்று (01) நடத்திய சோதனையின்போது, 658 சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள சங்குகளுடன் சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக  புத்தளம் உதவி மீன்பிடிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மீன்பிடி மற்றும் நீரியல்வள சட்டத்திற்கு அமைய, 70 மில்லிமீற்றருக்கும் (7cm) குறைந்த விட்டத்தைக் கொண்ட சங்குகளை வைத்திருப்பது, விற்பனை செய்வது, காட்சிப்படுத்துவது, கொள்வனவு செய்வது, ஏற்றுமதி செய்வது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்ட விடயங்கள் ஆகும்.
 
 
 





 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment