அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், தேர்தல் முறைமையில் சீர்திருத்தம் செய்தல், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல் உட்பட ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயல்படுவதென ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு சுகததாஸ அரங்கில் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இப்பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி இம்மாநாட்டில், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதற்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்துக் கட்சிகள் மற்றும் கொள்கைகளை அங்கீகரிக்கும் அனைத்து தரப்பினர், நபர்களினதும் ஆதரவினைக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசியலமைப்புச் சூழ்ச்சி மூலம் 52 நாட்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினை அதிகாரத்திலிருந்து நீக்கிய ஜனநாயக விரோத செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிக்கும் இந்த மாநாடு, அந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக முன்நின்று செயற்பட்ட பொதுமக்களுக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கிறது.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளைப் பாராட்டுவதுடன், அக்காலப் பகுதியில் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், பொதுமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் அச்சம், தயக்கம் எதுவுமின்றி செயற்பட்ட சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் கௌரவமான நன்றிகளைத் தெரிவிக்க வேண்டுமென இந்த மாநாடு பிரேரிக்கிறது.
இப்பிரிவுக்கு உட்பட்ட சிலரின் முறைப்பாடுகள் காணாமல் போயுள்ளமையினால் அவர்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கு குறிப்பான சலுகைக் காலமொன்றை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், அரச சேவையில் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயன்முறையை மென்மேலும் துரிதப்படுத்தி, இலகுபடுத்தும் நோக்கில் அந்தந்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கு அதிகாரத்தினை வழங்குமாறும், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று ஒருவருட காலப் பகுதியினுள் அனைத்து அரசியல் பழிவாங்கல்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென இம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இம் மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.மு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது, மக்கள் சேவைக்காக என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியவுடன் எனக்கு வாக்களிக்கும் மக்களுடன் பொது உடன்படிக்கையை செய்துகொள்ளவேன் என ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்தார்.
இனம், மதம், மொழி பேதம் கடந்து முழு நாட்டுக்குமான பொது வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி என்மீது சுமத்தப்படும் பொறுப்பை நீதியாகவும், நேர்மையாகவும் நிறைவேற்ற உறுதிபூண்டிருப்பதாகவும் அதன் பொருட்டே சமூக உடன்படிக்கையை செய்துகொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வளம் கொண்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் புதிய பாதையில் இன்று முதல் பயணிக்கவுள்ளேன். இது புதிய மாற்றத்துக்கான ஆரம்பமாகும். என்னை நம்பி அணிதிரண்டிருக்கும் மக்களையும், கட்சியையும் நாட்டையும் நான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. என்னிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவேன்.
எமது கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தியாகம் தான் இன்று இந்த இடத்தில் நான் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளேன். எமது கட்சியின் எழுச்சிக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறுபட்ட தியாகங்களைச் செய்திருக்கின்றார். அதில் இத் தியாகம் விலைமதிக்க முடியாதது.அதற்காக தலைவருக்கு தலைசாய்த்து நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
26 வருடங்களுக்குப் பிறகு நாட்டின் பாரிய பொறுப்பைக் கொண்ட பதவியை பெற கட்சி எனக்கு இன்று ஏகமனதான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. என்மீதான நம்பிக்கையை ஒருபோதும் சிதையவிடமாட்டேன். சிலர் குடும்ப ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கின்றனர். குடும்ப அதிகாரத்துக்கு இடமளிக்க முடியாது. கட்சியிலும் திறமை மிக்கவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அனுபவம் கொண்டவர்களை நாட்டுக்காக பயன்படுத்த வேண்டும். திறமை காரணமாகவே என்னை பிரதமர் அங்கீகரித்தார்கள்.
முதியவர்கள், தாய்மார்கள், சிறுவர்கள் போன்றவர்களின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை கொடுப்போம். பாலர் பாடசாலைகளை கல்வித் திட்டத்தில் இணைத்து இலவசக் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். சமுக நலன்கள் விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்படும். சுகாதாரத்துறையை மேலும் வலுவூட்ட நடவடிக்கை எடுப்பேன். மருந்து மாபியாவிலிருந்து இலவச மருத்துவத்தை காப்பாற்றுவேன்.
கிராமிய மட்டத்திலிருந்து மருத்துவமனைகளில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும். இளைஞர்கள் முக்கியத்துவம், டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி புதிய மாற்றத்துக்கு வலுவூட்டப்படும்.
சகல இன மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். நாட்டின் சனத்தொகையில் பெண்கள் 51 சதவீதமானோர் காணப்படுவதால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய இடத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்தில் பெண்கள் சாசனம் ஒன்றை தயாரிக்கவும் எண்ணியுள்ளேன்.
தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவேன். மக்களுக்கு பாதுகாப்பு போன்று பாதுகாப்புத் தரப்பின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம். படை வீரர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். பாதுகாப்புத் தரப்பினர் கௌரவம் பாதுகாக்கப்படும் என்றார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment