தமிழர் மரபுரிமை பேரவையால் ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று தமிழரசு கட்சி உறுப்பினர்களிடம் நேற்று (29) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோவில் குடியிருப்பு கிராம அலுவலர் அலுவலகத்தில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகளுக்கும் தமிழர் மரபுரிமை பேரவை மற்றும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது
இந்த சந்திப்பின் போதே குறித்த விடயம் தொடர்பான மகஜர் ஒன்று தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு
மத்திய அரச நிர்வாக கட்டமைப்புக்களினால் வடக்கு, கிழக்கு பகுதிகள் மீது மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக பின்வரும் அவசர நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
1. நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயமாகும். இவ்வாலயத்தைத் திட்டமிட்டு ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதை உடன் நிறுத்த காத்திரமான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும்.
2. வட மாகாணத்தில் வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்ட தொல்லியல் பிரதேசங்கள், நம்பகத்தன்மையான தமிழ்த் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைகழகம், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் நிர்வாக மற்றும் கிராம மட்ட மக்களின் பங்ஙகளிப்புக்கள் உடன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படும் வரை, வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிட்ட இடங்களில் தற்போதுள்ள இடங்களைவிட மாற்றங்கள் திரிபு படுத்தல்கள் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படாது பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசாணை ஒன்றினை உடன் வெளியிட குறித்த அமைச்சிடம் இருந்து எழுத்துமூலமான வாக்குறுதி பெறப்பட வேண்டும்
3. வட மாகாணத்தில் மகாவலி “L“ அபிவிருத்தி வலயம் மூலம் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களமயமாக்கல் தற்போதும் தொடர்ந்து இடம்பெறுவதால் குறைந்தபட்சம் 2007 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதுடன் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் எல்லைக்கிராம தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
4. GPS தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 2009 இன் பின்னர் வர்த்தமான பிரசுரம் செய்யப்பட்ட ஒதுக்கக் காடுகள் தொடர்பான எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
5. வனஜீவராசிகள் திணைக்களத்தால் 2009 ஆம் வர்த்தமானியில் பிரசுரம் செய்யப்பட்ட தேசிய பூங்கா மற்றும் இயற்கை இடங்கள் மக்களின் குடியிருப்பு வாழ்வாதாரம் என்பவற்றுடன் தொடர்புடையது ஆகையால் இவற்றுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதுடன் மக்கள் குடியிருப்புக்கள் கலாசாரம் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படா வண்ணம் அரசாணை ஒன்று உடன் வெளியிடப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நியாயபூர்வ கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் செவிசாய்க்க தவறும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு வழங்கும் ஆதரவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.
மாங்குளம் நிருபர்
No comments:
Post a Comment