சிறிது காலத்திற்காவது இராணுவ அதிகாரி நாட்டின் ஜனாதிபதியானால் மக்களின் ஜனநாயக உரிமை இல்லாது போகும் என்றும் எவ்வாறாயினும் அவ்வாறு இடம்பெற இடமளிக்கப்போவதில்லையெனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், தற்போது கோட்டாபாயவால் வெல்ல முடியாதென்பது சகலருக்கும் தெரியும். இவ்வாறு நடக்கப்போவதுமில்லை. எனினும் சிறு காலத்திற்காவது இவர் ஆட்சிக்கு வருவாரானால் அரச ஊழியர்கள் எவ்வாறு தமது அலுவலகங்களில் செயலாற்ற முடியும் என்பதையும் பார்த்துக்கொள்ள முடியும்.
கோட்டாபாய குடும்பத்தின் அப்பாவியானவர் என தெரிவிக்கப்படுகிறது. அதை அவர் கூறி ஏற்க முடியாது. அவரது வாழ்க்கை சரித்திரத்தை அவரது சிறந்த நண்பரான கமல் குணரத்ன எழுதியுள்ளார்.
அவரும் ஒரு இராணுவத் தலைவர். நல்லவர் என்று சொல்வதும் கெட்டவர் என்று சொல்வதும் எல்லோருமே இராணுவத்தின் உள்ளவர்கள் தான். அவர் ஜனாதிபதியானால் அங்குள்ள வீடுகளுக்கும் இராணுவத்தினர் வருவர்.
கமல் குணரட்ன தமது நூலில் இந்த அப்பாவி நபர் வீட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு ஒரு நாள் வீட்டில் அவர் இருந்தபோது அவரை ஏசினார் என்பதற்காக அவர் உணவருந்திக்கொண்டிருந்த சாப்பாட்டுத் தட்டை தலையில் அடித்துக்கொண்டார் என எழுதியுள்ளார். இதனை வைத்து ஏனையோரையும் கணித்துவிடலாம். அதுதான் அவரது அப்பாவித் தனம்.
இப்போது நாட்டில் வெள்ளை வேன் வருவதில்லை. எவரையும் கடத்துவதும் இல்லை. வடக்கிலிருந்து தெற்கு வரை அனைவருக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலங்களில் எந்த தொழிற்சங்க தலைவருக்கும் எத்தகைய பிரச்சினையும் வந்ததில்லை. நான் அரசாங்கத்தில் நல்லாட்சிக் கொள்கையையே நடைமுறைப்படுத்தினோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment