இஸ்லாம் சமயப் பாட வெற்றிடம் காணப்படும் அனைத்து பாடசாலை வெற்றிடங்களையும் மெளலவி ஆசிரியர் நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் உடனடியாக எடுக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.பொ.பெ. மத்திய கொழும்பு அமைப்பாளரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் சம்மேளன அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மருதானை மத்திய நிலையத்தில் நடைபெற்ற மௌலவி மற்றும் மௌலவியாக்களுடனான கலந்துரையாடலின் போதே உவைஸ் ஹாஜி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டில் இன்று மௌலவிப் பட்டம் பெற்று அல் - ஆலிம் பரீட்சையிலும் சித்தியடைந்த மெளலவிமார்கள் மற்றும் மெளலவியாக்கள் நிறையப் பேர் உள்ளனர். அத்துடன், கடந்த முறை நியமனத்துக்காகப் போட்டிப் பரீட்சை எழுதி இவர்கள் சித்தியடைந்த போதும், நியமனம் பெற முடியாது போன மௌலவிமார்களும் மௌலவியாக்களும் இன்று கடும் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பல்லாயிரம் மௌலவிமார்கள் தமது கற்கையினைத் திறம்பட முடித்து, உரிய பரீட்சைகளை எழுதி, ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதி பெற்றிருந்தாலும், இது வரையிலும் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குவதில் காட்டப்படும் அக்கறையின்மை பலரை நிராசை கொள்ளச் செய்துள்ளது. கடந்த காலங்களில் போதியளவுக்கு மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதேநேரம், மௌலவி ஆசிரியர் நியமனம் குறித்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டமையும், இந்நியமன முன்னனெடுப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்களின் தேவையும் வெற்றிடமும் இருந்தும்கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளின் முறையான திட்டமிடல் மற்றும் தகவல் திரட்டு இன்மையால், அந்த வாய்ப்பு நழுவிப் போகும் ஒன்றாகவே மாறி உள்ளதைக் காண்கின்றோம்.
மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 2008 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றிருந்த நிலையில், இதில் 148 பேருக்கு மாத்திரமே மெளலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இன்னும் மிகுதியாக 276 மெளலவி ஆசிரியர்களது வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
2008 ஆம் மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் பிரகாரம், இன்னும் 424 மெளலவி ஆசிரியர் வெற்றிடங்கள், இஸ்லாம் சமயப் பாட வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் நிலவுவதாக அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
குறைந்த பட்சம் 500 மௌலவிகளையாவது ஆசியர்களாக நியமிக்கச் செய்யும் திட்ட அறிக்கை ஒன்றையும் நாம் விரைவில் தயார் செய்யவுள்ளோம் என்றார்.
உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீதும் இங்கு கருத்துரை வழங்கினார்.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment